5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை 2025-ம் ஆண்டில் அடைய வேண்டும் என இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் 2029ம் ஆண்டுதான் இந்த இலக்கை அடைய முடியும் என ஐஎம்எப் கணித்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது முதல் , 2025-க்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்கை முன்மொழிந்து வருகிறது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர் நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘இந்தியாவின் பொருளாதார நிலை 1.85 லட்சம் கோடி டாலராக இருந்தது. இந்த 5 ஆண்டுகளில் நாங்கள் நாட்டின் பொருளாதாரத்தை 2.7 லட்சம் கோடி டாலராக உயர்த்தியுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவோம்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
ஆனால், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரநிலை இலக்கை அடையவேண்டுமென்றால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி விகிதம் ஆண்டு ஒன்றுக்கு குறையாமல் 9 சதவீதத்துக்கு மேல் இருக்கவேண்டும். ஆனால், தற்போது ஜி.டி.பி. 5 சதவீதமாகத்தான் இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த விமர்சனங்கள் குறித்து கடந்த ஜூன் மாதமே பிரதமர் மோடி பேசிய போது, “5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் சாத்தியமா? என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்கள், இந்தியர்களின் திறன்மீது நம்பிக்கையில்லாதவர்கள். 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைவது சாதாரணமல்ல என்று வாதிடுகிறார்கள். துணிச்சல், புதிய சாத்தியக்கூறுகள், வளர்ச்சிக்காக தியாகம் செய்யும் தகிக்கும் தீக்கனல், இந்தியத் தாய்க்கு உழைக்கும் பாங்கு, புதிய இந்தியாவுக்கான கனவு ஆகியவை இருப்பது அவசியமாகிறது. நான் கூறிய அனைத்தையும் கடைபிடித்தால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு மெய்ப்படும்’ என்று கூறியிருந்தார்.
அதேபோல், கடந்த பட்ஜெட் சமயத்தில் 2025ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயரும். ஒரு வேளை காலதாமதம் ஏற்பட்டால் ஒரிரு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை 2025-ம் ஆண்டில் அடைய வேண்டும் என இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் 2029ம் ஆண்டுதான் இந்த இலக்கை அடைய முடியும் என ஐஎம்எப் கணித்திருக்கிறது. அதே சமயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறையும் என ஐஎம்எப் கணித்திருக்கிறது. தற்போது ஒரு டாலரின் மதிப்பு 77 ரூபாய் என்னும் அளவில் இருக்கிறது. 2028ம் ஆண்டு ஒரு டாலர் ரூ.94 வரையில் சரியும் என கணித்திருக்கிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM