“அதிக பணத்தின் மோகத்தால் விசாரிக்காமல் வெளிநாடு செல்லாதீர்கள்”-ஒரு தாயின் கண்ணீர் கோரிக்கை

வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற மோகத்தில் விசாரிக்காமல் செல்ல வேண்டாம் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், லட்சுமண் நகரை சேர்ந்தவர் வனஜா(58), இவரது மகள் மஞ்சுளா(38). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் 16 ஆண்டுகளுக்கு முன்பாக மஞ்சுளாவை விட்டுவிட்டு சென்று விட்டார். இதுநாள் வரை தாயின் பராமரிப்பில் இருந்துவந்த நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவெடுத்து திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த பாஷா என்ற டிராவல் ஏஜென்சி மூலம் குவைத் நாட்டிற்கு வேலைக்காக 60000 ரூபாய் பணம் கொடுத்து கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி சென்றுள்ளார். குவைத் நாட்டிற்கு வேலைக்காகச் சென்றவர், தான் அங்கு விற்கப்பட்டு மிகவும் கஷ்டபடுவதாக அவரது அம்மாவிடம் வாட்ஸாப் மூலம் வீடியோ பதிவுசெய்து அனுப்பியுள்ளார்.
இது குறித்து பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் டொமினிக் ராஜிடம் ஏப்ரல் 26ஆம் தேதி தெரிவித்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் தாம்பரம் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலையை சேர்ந்த ஏஜெண்ட் பாஷா(31), சர்தார்(50), ஆகியோரை 28ஆம் தேதி பிடித்து வந்து விசாரணை செய்து, குவைத்தில் சிக்கியுள்ள மஞ்சுளாவை மீட்டு தமிழகம் வர ஏற்பாடு செய்தனர்.
image
இன்று இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் கமிஷ்னர் ரவி, வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற மோகத்தில் நிறைய பெண்களை வேலைக்கு அனுப்புகிறார்கள். இனிமேல் விசாரிக்காமல் யாரும் செல்ல வேண்டாம். கண்ணீர் மல்க தாய் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் ஆணையரக போலீசார் உடனடியாக ஒரு பெண்ணை மீட்டுள்ளனர் என தெரிவித்தார். மேலும், இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து protector of emigrations-க்கு எழுத உள்ளதாகவும், தனியாக ஒரு பெண்ணை அனுப்பும்போது சரியான முறையில் விசாரித்துத்தான் அனுப்ப வேண்டும் எனவும், அரசுக்கு விவரங்களை அனுப்பி சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்புவதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வை காணலாம் எனவும் தெரிவித்தார்.
image
இதுகுறித்து மீட்கப்பட்ட பெண் கூறுகையில், தன்னை கொத்தடிமை போல் நடத்தியதாகவும், உணவு வழங்காமல் அடிக்க முயன்றதாவும், இதனால் தனது அம்மாவை தொடர்பு கொண்டு கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் மூலம் போலீசாரின் உதவியோடு 5 நாட்களில் தாயகம் திரும்பியதாக கூறினார். இல்லையென்றால் பிள்ளை குட்டிகளை கூட பார்த்து இருக்க முடியாது என கண்ணீர் மல்க பேசினார்.
குவைத்தில் சிக்கித் தவித்த தமிழக பெண்ணை தகவல் கிடைத்த 5 நாட்களில் மீட்டு தமிழகம் கொண்டு வந்த பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார் டொமினிக் ராஜ், உதவி ஆணையர் ஆரோக்கிய ரவிந்திரன், ஆய்வாளர் தயாள் ஆகியோரை தாம்பரம் கமிஷ்னர் ரவி பாராட்டினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.