புதுடெல்லி:
கொரோனா தினசரி பாதிப்பு இன்று 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,568 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது.
கடந்த 27ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 2,927 ஆக இருந்தது. அதன்பிறகு 5 நாட்கள் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தினந்தோறும் 4 லட்சம் மாதிரிகளுக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் 2,95,588 மாதிரிகள் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. இதுவும் தினசரி பாதிப்பு இந்த அளவுக்கு குறைய ஒரு காரணமாக கூறப்படுகிறது.
டெல்லியில் புதிதாக 1,076 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு நேற்று முன்தினம் பாதிப்பு 1,485 ஆக இருந்த நிலையில் நேற்று 27 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரம் டெல்லியில் தினசரி பாதிப்பு விகிதம் 6.42 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அரியானாவில் 439, கேரளாவில் 250, உத்தரபிரதேசத்தில் 193, கர்நாடகாவில் 111 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 84 ஆயிரத்து 913 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலின்படி 15 மரணங்கள் நேற்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர பஞ்சாபில் 3 பேர், மகாராஷ்டிரா, மிசோரத்தில் தலா ஒருவர் என மேலும் 20 பேர் இறந்துள்ளனர். மொத்தபலி எண்ணிக்கை 5,23,889 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாள்தோறும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,911 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
இதுவரை குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 41 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19,137 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றுமுன்தினத்தை விட 363 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 16,23,795 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 189 கோடியே 41 லட்சத்தை கடந்தது.
இதற்கிடையே நேற்று 4,19,552 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 83.86 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.