சென்னை ராய்ப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, புகாரின் பேரில், கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜி (45). இவர் மது போதைகு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அதனால், அவரை மது போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க, அவருடைய குடும்பத்தினர் ராஜியை, சென்னை ராயப்பேட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். ராஜி இதற்கு முன்னர், சிலமுறை இந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் ராஜி நேற்று (மே 2) அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே ராஜிக்கு அடிபட்டு காயம் அடைந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவருடைய மனைவிக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் ராஜியின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கே, ராஜி உயிரிழந்தது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ராஜி மரணத்தில் சந்தேகமடைந்த அவரின் மனைவி, இந்த விவகாரம் குறித்து சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உயிரிழந்த ராஜியின் மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் ராஜியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட ராஜி மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து, போலீசார் தனியார் மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். காவல் துணை ஆணையர் பகலவன் தலைமையிலான குழு மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கே உடைந்த நிலையில் பிரம்பு கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. உயிரிழந்த ராஜியின் உடலிலும் பிரம்பால் அடித்த தடம் இருப்பதாகவும், வாயில் பல் அனைத்தும் உடைந்திருப்பதாகவும் அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட ராஜி மர்மான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், ராஜியின் மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும், அந்த மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த யுவராஜ், சதிஷ் உள்ளிட்ட 5 பேரைக் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயனைக் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றார்கள்.
அதோடு, அந்த மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையிலிருந்த 12 பேரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்துக்கு மாற்றியுள்ளனர். மேலும், அந்த மறுவாழ்வு மையத்தை மூடி சீல் வைப்பதற்கு வருவாய் அலுவலருக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”