இந்தி தேசிய மொழி அல்ல என்றும், தமிழர்கள் ஏன் இந்தி பேச வேண்டும் என்றும் நடிகர் அஜய் தேவ்கனுக்கு, பாலிவுட்டின் பிரபல பாடகரான சோனு நிகாம் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின், 37-வது கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியநிலையில், தென்னிந்திய மாநில அரசுகள் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.
அரசியலையும் தாண்டி, திரைப்படத்துறையிலும் இதன் தாக்கம் வெளிப்பட்டு கடந்த சில வாரங்களாக மொழி சர்ச்சை பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக பான் இந்தியா படங்களாக வெற்றி அடைந்த தென்னிந்திய படங்களான ‘பாகுபலி’, ‘புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, கே.ஜி.எஃப். 2’ உள்ளிட்ட படங்களால் இந்த மொழி சர்ச்சை மேலும் புயலை கிளப்பியது. அமித்ஷாவின் பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர் ரஹ்மான் ழகரம் தாங்கிய தமிழ் அன்னையின் புகைப்படத்தை பகிர்ந்தார்.
ஏ.ஆர் ரஹ்மானை தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிராக கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு பட விழாவில் இந்தி தேசிய மொழி இல்லை என்றும், பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவில் வெற்றிபெற முடியாமல் தோல்வியை சந்திக்கிறார்கள் எனவும் பேசியிருந்தார். இதையடுத்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திதான் நமது தேசிய மொழி என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். நடிகர் சுதீப்புக்கு ஆதரவாக கர்நாடக முன்னாள் மற்றும் இந்நாள் முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் ட்விட்டர் களத்தில் வட இந்திய – தென் இந்திய ரசிகர்கள் மாறி மாறி பதிலடி கொடுத்தனர். அதிலும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், இந்தி, ஆங்கிலம், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது. அதனால் சமஸ்கிருதம் தான் தேசிய மொழி எனக் கூறினார். இந்த மொழி சர்ச்சை ஓய்வில்லாமல் நீடித்து வரும்நிலையில், பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாம் கருத்து தெரிவித்துள்ளார்.
பீஸ்ட் ஸ்டுடியோவின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஷாந்த் மேத்தாவுடனான உரையாடலின் போது பேசிய பாடகர் சோனு நிகம், “எனக்குத் தெரிந்தவரையில், இந்திய அரசியலமைப்பில், இந்தி தேசிய மொழியாக எழுதப்படவில்லை. இது தொடர்பாக நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளேன். நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி, என்பது எனக்குப் புரிகிறது.
உலகத்தின் மூத்த மொழி தமிழ் என்பதையும் நாம் அறிவோமா? உலகின் பழமையான மொழி எது என்று சமஸ்கிருதத்துக்கும், தமிழுக்கும் இடையே விவாதம் நடந்து வருகிறது. உலகிலேயே தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று மக்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் நம் நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும்.
பல பிரச்சனைகள் உள்ள நம் நாட்டில் புதிய பிரச்சனை ஒன்று தேவையா?. நீ தமிழன் என்றாலும், இந்தியை கட்டாயம் பேச வேண்டும் என்று பிறர் மீது மொழியைத் திணித்து, நாட்டில் நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சி செய்துக்கொண்டிருக்கிறோம். எதற்காக அவர்கள் இந்தி பேச வேண்டும். எந்த மொழி பேச வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். ஒரு பஞ்சாபி பஞ்சாபியில் பேசட்டும், தமிழர் தமிழில் பேசட்டும். ஆங்கிலத்தில் பேச வசதியாக இருந்தால் ஆங்கிலத்தில் பேசட்டும். நமது நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் கூட ஆங்கிலத்தில் தான் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரு விமான பயணத்தின்போது, நான் இந்தியில் பேசினேன். அதற்கு விமான பணிப்பெண் எனக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தார். மொழிகளை வைத்து மக்களை பிளவுப்படுத்த வேண்டாம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 48 வயதான சோனு நிகாம், 32 மொழிகளில் இதுவரை பாடியுள்ளார். அவரின் இந்தப் பேச்சுக்கு பாராட்டுகள் குவிகின்றன.