கடலூர், திருவந்திபுரத்தை அடுத்திருக்கும் கே.என்.பேட்டையைச் சேர்ந்த சேஷாசலம் என்பவரின் மகள் பேபி. 60 வயது நிரம்பிய மாற்றுத்திறன் மூதாட்டியான பேபிக்கு திருமணம் ஆகாததால் தனியாக வசித்துவந்தார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்த இவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதையடுத்து அவரை மீட்ட அவர் உறவினர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிய மருத்துவர்கள், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையைக் கேட்டிருக்கின்றனர்.
அப்போது அவரிடம் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர் அவர் உறவினர்கள். தொடர்ந்து மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லையென்றால், அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்குச் சென்ற மூதாட்டியின் உறவினர்கள், விஷயத்தைக் கூறி முதல்வரின் காப்பீட்டு அட்டையைக் கேட்டிருக்கின்றனர். ஆனால் நோயாளியின் நேரடியான ரத்த சொந்தங்கள் உரிய ஆவணங்களுடன் வந்தால்தான் காப்பீடு அட்டை கொடுக்க முடியும்.
அப்படி இல்லையென்றால் நோயாளியே நேரில் வர வேண்டும் என்று கூறியிருக்கின்றனர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள். அதன்படி மருத்துவமனைக்கு திரும்பிச் சென்ற அந்த மூதாட்டியின் உறவினர்கள், அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவரிடம் காப்பீட்டு அட்டைக்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு காப்பீட்டு அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பிறகு அந்த மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், இப்படியான ஆதரவற்றவர்களுக்கு அந்தத் திட்டம் முழுமையாகச் சென்றடைவதில்லை. அதனால் இந்தத் திட்டத்தை இன்னும் எளிமையாக்கினால், எண்ணற்ற ஏழைகள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது தொடர்பாக விளக்கம் கேட்க கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணித்தைத் தொடர்புகொண்டபோது, “அந்த நிலையில் நோயாளி ஏன் அழைத்து வரப்பட்டார், அதற்குக் காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டிருக்கிறேன். இனிவரும் நாள்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பயனாளிகளுக்கு நேரில் சென்று மருத்துவக் காப்பீடு அட்டையை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம்” என்றார்.