டேராடூன்: உத்தரகாண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் அக்ஷய திருதியையோட்டி நேற்று பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. இதன்மூலம், சர்தாம் யாத்திரை கோலாகலமாக தொடங்கப்பட்டது. உத்தரகாண்டில் உள்ள புகழ் பெற்ற பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு, ஆண்றுதோறும் ‘சர்தாம் யாத்திரை’ எனப்படும் புனித யாத்திரை நடத்தப்படுகிறது. இது நேற்று முதல் தொடங்கியது. இதன் முதல் கட்டமாக, அக்ஷய திருதியை முன்னிட்டு கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டன. முன்னதாக, கங்கா மற்றும் யமுனா சாமி சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து, கேதர்நாத் வருகிற 6ம் தேதியும், பத்ரிநாத் வருகின்ற 8ம் தேதியும் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே, இந்த யாத்திரையில் பங்கேற்பதற்கு ஒரு லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கங்கோத்ரியில் தினமும் 7 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல், யமுனோத்ரியில் தினமும் 4 ஆயிரம் பேர், கேதர்நாத்தில் 12 ஆயிரம் பேர், பத்ரிநாத்தில் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது மனைவியுடன் கங்கோத்ரிக்கு சென்று நேற்று பிரார்த்தனை செய்தார்.