ஹைதராபாத்:பெரியவர்களுக்கு ஒரு ‘டோஸ்’ மட்டுமே வழங்கப்படும் ‘நிமோகோகல்’ எனப்படும் நிமோனியா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை இந்தியாவில் ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் குழந்தைகள் பெரியவர்கள் என பல லட்சம் பேர் நிமோனியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க நிமோனியா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ௪ டோசும் ௧௮ வயதுக்கு மேற்பட்டோருக்கு ௨ டோசும் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை சேர்ந்த ‘பயாலாஜிகல் இ’ நிறுவனம் நிமோகோகல் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதை ௧௮ வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் செலுத்தினால் போதும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சில மாதங்களுக்கு முன் முதல் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ௬௦ பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் இந்த தடுப்பூசி நிமோனியாவிலிருந்து ௮௫ சதவீதத்துக்கு மேல் பாதுகாப்பு அளிப்பது உறுதியானது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனை ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது என பயாலாஜிகல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட பரிசோதனை பல நகரங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் ௨௫௦க்கும் அதிகமானோரிடம் இந்த சோதனை நடத்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement