புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டுக்கு சென்று அந்நாட்டு அதிபர் மேக்ரானை சந்திக்க உள்ளார். இந்நிலையில், இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்தில் இருந்து பிரான்ஸ் விலகிக் கொள்வதாக அந்நாட்டு கடற்படை நேற்று தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்காக ரூ.43,000 கோடி செலவில் பி75ஐ எனும் திட்டத்தின் கீழ் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டில் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தில் 2 இந்திய நிறுவனங்களுடன் வெளிநாட்டு நிறுவனம் இணைந்து கப்பல் கட்டும் பணியை மேற்கொள்ளும். இதற்கான ஏலத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட 5 நாடுகள் பங்கேற்க இருந்தன. இந்நிலையில், பி75ஐ திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்கப் போவதில்லை என பிரான்ஸ் கடற்படை நேற்று அறிவித்தது. இந்தியா கட்ட உள்ள நீர்மூழ்கிக் கப்பலில், காற்று சுயதீன உந்துவிசை தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாலும், அத்தகைய தொழில்நுட்பம் பிரான்சிடம் இல்லை என்பதாலும் ஏலத்தில் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.