அட்சய திருதியை நாளில் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது: அதிகாலையிலேயே கடைகள் திறக்கப்பட்டன

சென்னை: அட்சய திருதியை நாளான நேற்று, தங்கம் வாங்க தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சில கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக டோக்கன் முறையில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தங்கம் மீது பொதுமக்களுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. அதிலும், ஆபரணத் தங்கமாக வாங்குவதில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.

இந்நிலையில், அட்சய திருதியை நாளான நேற்று, தங்கம் வாங்க பொதுமக்கள் நகைக் கடைகளுக்குப் படையெடுத்தனர். இதனால், சென்னையில் தியாகராய நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

இதேபோல் கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்டமுக்கிய நகரங்களில் உள்ள நகைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் நகைக் கடைகள் நேற்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தங்க நகைகள் கிராமுக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை தள்ளுபடியும், சில கடைகளில் தங்க நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கப்பட்டன.

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால், டோக்கன் வழங்கப்பட்டு கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, தியாகராயநகரில் உள்ள நகைக்கடை மேலாளர் ஒருவர் கூறும்போது, ‘‘அட்சய திருதியை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே நகை வாங்க முன்பதிவு செய்யும் திட்டத்தைத் தொடங்கி விட்டோம். வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகளையும் அறிவித்தோம். கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை தினத்தன்று நகைக் கடைகள் திறக்கப்படவில்லை.

இந்த ஆண்டு கரோனா தொற்று இல்லாததால் பொதுமக்கள் அதிக அளவில் கடைக்கு வந்து நகைகள் வாங்குகின்றனர். இதனால், வியாபாரம் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது’’ என்றார்.

இதேபோல், தமிழகம் முழுவதும் அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகளில் தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளதாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறினார்.

பவுனுக்கு ரூ.360 குறைந்தது

இதற்கிடையே, சென்னையில் நேற்று, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,796-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.38,368-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்தத் தங்கம் பவுன் ரூ.41,560-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.67,200-க்கும் விற்பனையானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.