இலங்கை மக்களுக்கு உதவிட திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தி.மு.க சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். மேலும், திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியில், அந்நாட்டு மக்கள் சிக்கியுள்ளனர். உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் காரணமாக பிரிந்து கிடந்த சிங்களவர்களும் தமிழர்களும், பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்ச குடும்பம்தான் என்று குற்றம்சாட்டி அவர்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழக அரசு தேவையான உதவியை செய்யும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அங்கே உள்ள தமிழர் தலைவர்கள் தமிழர்களுக்கு மட்டுமல்லாம ஒட்டுமொத்த இலங்கைக்கும் உங்கள் உதவி அமைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, இலங்கை மக்களுக்கு உதவிட உணவுப் பொருள்கள் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அளிக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட மக்களுக்கு உதவி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். டாக்டர் ஜெய்சங்கரும் முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதினார். அதில், தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து இலங்கைக்கு உதவலாம் என்று கூறியிருந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தி.மு.க சார்பில் ரூ.1 கோடியும்,தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம்.

அந்த வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்ப உள்ளோம்.

மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.