அமைச்சர் விழாவில் ஆபாச படம்: அதிர்ச்சியில் அலறிய அதிகாரிகள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திஸ்பூர்: அசாமில், மத்திய – மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தியன் ஆயில் நிறுவன நிகழ்ச்சியில், மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திரையில் திடீரென ஆபாச படம் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தின்சுகியா என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், ‘மெத்தனால்’ கலந்த பெட்ரோலின் அறிமுக விழாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில், பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, அசாம் தொழில் துறை அமைச்சர் சஞ்சய் கிஷன் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட எல்.இ.டி., திரையில் நேரலையாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அப்போது, திடீரென திரையில் ஆபாச படம் ஓடத் துவங்கியது. இதனால் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு சில நொடிகள் மட்டுமே ஓடிய அந்த ஆபாச படம் உடனடியாக நிறுத்தப்பட்டது. அதற்குள் அதை பலர், ‘மொபைல் போனில்’ படம் பிடித்தனர். போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விழா அரங்குக்கு விரைந்து வந்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

latest tamil news

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த விழா, ‘ஜூம்’ செயலி வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதன் பயனாளர் ஐ.டி., மற்றும் ‘பாஸ்வேர்ட்’ ஆகியவற்றை இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் தங்கள் சமூக வலைதள கணக்கில் பகிர்ந்து இருந்தனர்.இதைப் பயன்படுத்தி, ‘ஆன்லைன்’ வாயிலாக நிகழ்ச்சியில் இணைந்த நபர், இந்த விஷமத்தனத்தை செய்திருக்க கூடும். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.