சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர்களின் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் முதலாமாண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற விழாவில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் வாசித்து உறுதிமொழி ஏற்றதாகவும், சமஸ்கிருதம் தெரியாது என்றும் கூறி வருகின்றன. ஆனால், சமஸ்கிருத வார்த்தை ஆங்கிலத்தில் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவக்கல்லூரி டீன் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு, கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் ஆலோசனையில், மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.