பாஜக தலைவரான கபில் மிஸ்ரா, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இரவுநேர பார்ட்டியில் இருக்கும் விடியோவை வெளியிட்டு, இதில் யார் யார் உள்ளனர் என்று கண்டுபிடியுங்கள் என சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோவானது நேற்று பெரும் வைரலானது. இந்த விடியோவுக்கு, “ராஜஸ்தான் பற்றி எரிகிறது. ஆனால் இவர் பார்ட்டியில் கலந்துகொள்கிறார்” என பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷாஜாத் ஜெய்ஹிந்த், ராகுல்காந்தியை விமர்சித்து ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் , `சாதாரண குடிமகன் இதைச்செய்தால் பிரச்னை இல்லை. ஆனால், எம்.பி.யும், அரசியல் கட்சியின் தலைவருமான ஒருவர் இதைச் செய்தால்….’ என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.
பா.ஜ.க-வின் இந்த விமர்சனங்களுக்கு , `ராகுல்காந்தி தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தான் நமது நட்பு நாடான நேபாளத்துக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடியைப் போல அழையா விருந்தாளியாக, பாகிஸ்தான் பிரதமரின் பிறந்த நாள் விழாவில் கேக் வெட்டச்செல்லவில்லை’ என்று காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா பதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ராவும், ராகுல்காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “ராகுல்காந்தியோ, அல்லது வேறு யாராக இருந்தாலும், நைட் க்ளப் செல்வதோ, திருமணம் நிகழ்வில் தனிப்பட்ட காரியங்களுக்கு நேரத்தைச் செலவிடுவதோ, இந்த பூமியில் இருக்கும் மற்றவர்களுக்கு எப்படி பிரச்னை ஆகும். தேநீர் கோப்பையில் பீர் அருந்தும் இரட்டை வாழ்க்கையை நடத்துகிற பா.ஜ.க-வினர், உங்கள் காரியங்களைச் சிறப்பாக செய்யுங்கள்” என மஹுவா மொய்த்ரா பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் வங்காள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், `அரசியல்வாதி ஒருவர் நைட் க்ளப்புக்கு செல்வது ஒன்றும் தவறில்லை. பார்லிமென்டில் ஆபாச படங்கள் பார்ப்பதை விட இது மோசமானது இல்லை’ என ட்வீட் செய்திருந்தார் குறிபிடத்தக்கது.