சோலார் வழக்கு: கேரள முதல்வர் இல்லத்தில் சோதனை நடத்திய சிபிஐ!

கேரளா முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி வசித்த, தற்போதைய முதல்வர் பினராய் விஜயன் வசிக்கும் முதல்வர் அரசு இல்லமான திருவனந்தபுரம் “க்ளிப் ஹவுஸ்”-ல் சோலார் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பான தடயங்களை தேடி சிபிஐ சோதனை நடந்துள்ளது. தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் வசிக்கும் அந்த வீட்டில், பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் இல்லாதபோது இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது கேரளாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு கேரளாவை உலுக்கிய சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் முக்கிய பிரதியான ”டீம் சோலார்” நிறுவன இயக்குனர் சரிதா எஸ்.நாயர், கடந்த 2016ம் ஆண்டு தனக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகாரளித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்திருந்தார். பின்னர் 2018, 2019ம் ஆண்டுகளில் இதே பாலியல் வன்கொடுமை குறித்து அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, மக்களவை உறுப்பினர்களான அடூர் பிரகாஷ், ஹெபி ஈடன், அகில காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.அனில்குமார், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவருமான ஏ.பி.அப்துல்லா குட்டி ஆகிய ஆறு பேர் பிரதிகளாக உள்ளனர். இதற்கான ஆதாரங்கள், டெலிஃபோன் உரையாடல்கள் ஆகியனவற்றையும் அந்த பெண் சமர்ப்பித்துள்ளார்.
image
இந்த வழக்கை 2016ம் ஆண்டு துவங்கி கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வரை குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஆகியன விசாரணை நடத்தி வந்தன. இந்நிலையில், அந்த பெண் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனு அளித்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு விட கேரள அரசு முடிவு செய்து ஜனவரி 23ம் தேதியிட்ட கேரள அரசிதழில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டது. இது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்படி 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோலார் பாலியல் துன்புறுத்தல் வழக்கு சிபிஐக்கு மாறியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வசித்த திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இல்லமான “கிளிப் ஹவுஸ்” சில் சோலார் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தடயங்களை தேடி சிபிஐ தற்போது அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
image
திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் வசிக்கும் அரசு இல்லமான “கிளிப் ஹவுஸ்” சில் தற்போதைய கேரளா முதல்வரான பினராய் விஜயன் வசித்துவருகிறார். முதல்வர் பினராய் விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் இல்லாத போது, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி முதல் பிரதியாக உள்ள சோலார் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சிபிஐ மேற்கொண்டிருக்கும் இந்த சோதனை பினராயி விஜயன் தற்போது வசிக்கும் இல்லத்திலேயே நடந்துள்ளது.
இதையும் படிங்க… தோனி Vs டூபிளசிஸ் -எந்த அணி முன்னேறும்? எந்த அணி பின்வாங்கும்? இன்று காத்திருக்கும் அதிரடி
image
முதல்வர் இல்லமான “கிளிப் ஹவுஸ்” சில் சோதனை நடத்த, சிபிஐ மத்திய அரசிடம் அனுமதி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “கிளிப் ஹவுஸ்”-ல் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி 2011 முதல் 2016ம் ஆண்டு வரை கேரள முதல்வராக இருந்த இருந்தபோது வசித்து வந்துள்ளார். அந்தக் காலங்களில் சோலார் பாலியல் துன்புறுத்தல் வழக்கு குறித்த தடயங்கள் ஏதும் இருக்கிறதா என்ற கோணத்தில் சிபிஐ சோதனை தற்போது நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிபிஐ-யின் இந்த சோதனையில் சோலார் பாலியல் துன்புறுத்தல் வழக்கு குறித்த தடயங்கள் ஏதும் சிபிஐக்கு கிடைத்ததா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.