புதுச்சேரி லாஸ்பேட்டையில் பெத்துசெட்டிப்பேட் பகுதியில் வசிப்பவர் சாமிநாதன். மாநில பாஜக தலைவரான இவரின் மனைவி விஜயலட்சுமியும், வானரப்பேட்டையைச் சேர்ந்த கட்டட காண்டிராக்டர் பாபு என்பவரின் மனைவி விஜயகுமாரியும் நெருங்கிய தோழிகள். சிறுவயது முதல் தோழிகள் என்பதால் கடந்த 40 ஆண்டுகளாக சாமிநாதன் குடும்பத்தில் முக்கிய நபராக வலம் வந்திருந்திருக்கிறார் விஜயகுமாரி. விஜயலட்சுமியின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவரின் சகோதரியைப் போல உடனிருந்து நடத்தியிருக்கிறார் விஜயகுமாரி.
இந்நிலையில்தான் கடந்த 2018-ம் ஆண்டு தனது கணவரின் தொழில் முதலீட்டுக்காக சாமிநாதன் மனைவி விஜயலட்சுமியிடம் கடன் கேட்டிருக்கிறார் விஜயகுமாரி. அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் தனது நகைகளை தருகிறேன் என்று கூறிய விஜயலட்சுமி, சில நகைகளை கொடுத்திருக்கிறார். அந்த நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் வாங்கியிருக்கிரார் விஜயலட்சுமி. அதன்பிறகும் பல்வேறு தருணங்களில் விஜயலட்சுமியிடம் இருந்து சிறுக சிறுக சுமார் 85 பவுன் வரை பெற்று, அதனை தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்திருக்கிறார் விஜயகுமாரி.
இந்நிலையில்தான் தனது மகளுக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது என்றும் அதற்காக நகைகளை திருப்பித் தருமாறும் விஜயகுமாரியிடம் கேட்டிருக்கிறார் விஜயலட்சுமி. ஆனால் அவர் நகைகளை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. விஜயகுமாரியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு நகைகளை கேட்டபோது அவர் அதற்கு சரியான பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் விஜயகுமாரியின் வீட்டுக்கு சென்று நகைகளை கேட்பதற்காக தனது உறவினர்களை அனுப்பியிருக்கிறார் விஜயலட்சுமி. அப்போதுதான் விஜயகுமாரியும், அவரின் கணவரும் அங்கு இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அதையடுத்துதான் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் விஜயலட்சுமி. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருக்கும் லாஸ்பேட்டை காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.