ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் பொதுத் தேர்வினை எழுத வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
மே 5ல் பொதுத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களும், மே 6 ல் பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களும், மே 10 ல் பொதுத்தேர்வு எழுதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களும் நன்கு தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.
தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருக்கும் பொதுத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் நன்கு தேர்வு எழுதி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நற்பெயர் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்ட பொதுத்தேர்வு இந்த வருடம் நடைபெற இருக்கிறது.
தமிழக அரசு தேர்வு மையங்களுக்கு கொரோனா தடுப்புக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முறையாக, சரியாக மேற்கொள்ள வேண்டும்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்னேற்பாடாக செய்து வைத்திருக்க வேண்டும்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7,506 பள்ளிகளை சேர்ந்த 3,98,321 மாணவர்கள், 4,38,996 மாணவியர் என மொத்தம், 8,37,317 பேர் இந்தாண்டு தேர்வு எழுத உள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,86,887 மாணவர்கள், 4,68,587 மாணவியர், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9,55,474 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7,534 பள்ளிகளில் இருந்து 4,33,684 மாணவர்கள், 4,50,198 மாணவியர், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 8,83, 884 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இதைத் தவிர, 10-ம் வகுப்பில் 30,890 தனித்தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 5 ஆயிரத்து 717 தனித்தேர்வர்களும், 12-ம் வகுப்பில் 28 ஆயிரத்து 380 தனித்தேர்வர்களும் இந்தாண்டு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
மாணவ, மாணவிகள் அனைவரும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
குறிப்பாக மாணவர்கள் சர்ச்சைக்கு இடம் கொடுக்காத வகையில், நேர்மையாக தேர்வு எழுத வேண்டும்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், முறைகேட்டிற்கு இடம் இல்லாத வகையில் தமிழக அரசு பொதுத்தேர்வை முறையாக நடத்திட வேண்டும்.
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை மனதில் நன்கு பதிய வைத்து, நன்கு தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.