சும்மாவே தங்கம் என்றால் பெண்களுக்குப் பிடிக்கும், அதுவும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேன்மேலும் பெருகும் என்று சொன்னால் விடுவார்களா?
தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள்களைப் போல, அட்சய திருதியை நாளையும் மாற்றிவிட்டார்கள் மக்கள். குண்டு மணி அளவு தங்கம் வாங்கும் ஏழைகள் முதல், கிலோ கணக்கில் தங்கம் வாங்கும் பணக்காரர்கள் வரை அனைவருமே தங்கம் வாங்குவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள்.
கே.ஜி.எஃப் படத்தில் `உலகத்திலிருக்கிற தங்கத்தையெல்லாம் உனக்கே தரம்மா’ என்று தாயிடம் மகன் சொல்வது போல, அனைவரும் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குத் தங்கத்தை வாங்க கிளம்பிவிட்டார்கள் போல.
மே 3-ம் தேதி அட்சய திருதியை நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.15,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனை ஆகியுள்ளதாக அனைத்திந்திய தங்க விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 18,000 கிலோ விற்பனை ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது
அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் பேசினோம்.
“கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் அட்சய திருதியை விற்பனை ஆன்லைனில் நடந்த நிலையில் இந்த ஆண்டு அட்சய திருதியை மிக அமோகமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே நகைக்கடைகளில் மக்கள் குவிந்தார்கள். நள்ளிரவு வரையிலும் தங்கம் வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறையவே இல்லை.
மக்களுக்குத் தங்கத்தின் மீது மோகம் என்று சொல்வதை விட தங்கத்தின் முக்கியத்துவம் குறித்து மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சமீப காலங்களில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
கொரோனா காலத்திலும் சரி, தற்போது இலங்கை போன்ற நாடுகளிலும் சரி, பொருளாதார நெருக்கடி என்று வரும்போது தங்கம்தான் கைகொடுப்பதாக இருக்கிறது.
பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி நாடு திவால் ஆகும்போது அரசு உத்தரவாதம் அளித்த ரூபாய் நோட்டுகள்கூட மதிப்பிழந்து விடுகின்றன. ஆனால், தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
என்னதான் கோல்டு பாண்டுகள் போன்றவை வந்தாலுமே பிசிக்கல் தங்கத்தின் மீதான ஆர்வம் அப்படியேதான் இருக்கிறது. கோல்டு பாண்டுகள் அரசுகளால் வெளியிடப்படுகின்றன.
அரசுகள் நெருக்கடிக்குள்ளாகும்போது அவை வெளியிடும் கோல்டு பாண்டுகளும் சிக்கலுக்குள்ளாகும். ஆனால், கையிலிருக்கும் தங்கம் எதற்கு ஈடாகாது. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விற்பனை அமோகம்தான்” என்றார்.
அணிந்துகொண்டு அழகு பார்க்கவும், அவசரத் தேவை எனில், விற்றுப் பணமாக்கவோ அல்லது அடகு வைத்து பணம் திரட்டவோ பயன்படும் தங்கத்திற்கான மவுசு என்றும் குறையாது!