டெல்லி: வெப்பத்தின் தாக்கம் தணிந்து வருவதால் இந்தியாவின் பல பகுதிகளில் மின் பற்றாக்குறை குறைந்து வருவதாக பவர் சிஸ்டம் ஆப்ரேஷன் கார்ப்பரேஷனின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மின் பற்றாக்குறை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஏப்ரல் 29-ம் தேதி அதிகபட்ச அளவாக 21 கோடியே 40 லட்சம் யூனிட் அளவிற்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டதால் பல பகுதிகளில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்தால் நாடு முழுவதும் பேசும் பொருளானது. அன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவாக வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டதோடு, அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையும் இருந்ததுமே மின் பற்றாக்குறை அதிகரிக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் காற்று வீசத் தொடங்கிய நிலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் மின்சாரத்தின் தேவை குறைய தொடங்கியது. இதனால் மின்பற்றாக்குறை குறையத் தொடங்கியுள்ளது. நேற்று நாட்டில் உள்ள 5 மண்டலங்களில் 3-ல் மின்பற்றாக்குறையே இல்லை என்பதும் தெரிய வந்தது. உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் பீகாரில் கடந்த 2 நாட்களாக மின் பற்றாக்குறை குறைந்திருப்பதும் பவர் சிஸ்டம் கார்ப்பரேஷனின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.