பெரம்பலூர் || மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலால் அரங்கேறிய கொலை., மாமூல் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்.!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் மாமூல் தருவதற்கு மறுத்த மருந்தக உரிமையாளரை ஒரு கும்பல் கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் சில கும்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அத்தகைய கும்பல்களை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நாகராஜன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்ற இளைஞர் அப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார். அதே ஊரில் அம்பேத்கர் குடியிருப்பைச் சேர்ந்த  பிரபாகரன் என்பவர் தலைமையில் சதீஷ், நிதீஷ், புகழேந்தி, ரவி ஆகியோர் அடங்கிய கும்பல், அடிக்கடி நாகராஜனை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறது. நேற்று மாலை 5 மணிக்கு மருந்தகத்திற்கு சென்று நாகராஜனை மிரட்டி மாமூம் கேட்டிருக்கிறது. அவர்களின் மிரட்டலுக்கு பணிந்த நாகராஜன் ரூ.150 மட்டும் கொடுத்துள்ளார். அதை பெற்றுச் சென்ற கும்பல், அடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் நாகராஜனிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளது. ஆனால், நாகராஜன் மாமூல் தர மறுத்து விட்டார். அத்துடன் இதுகுறித்து பிரபாகரனின் தந்தையிடம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால், ஆத்திரமடைந்த பிரபாகரனும், அவரது நண்பர்களும் நாகராஜனை வழிமறித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அவரது தலையில் கல்லைப் போட்டு தாக்கியதால் அவர் படுகாயமடைந்து இறந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த திமுகவின் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர்  முன்னிலையில் இந்த படுகொலை நடந்திருக்கிறது.  மாமூல் கேட்டு மிரட்டும் கும்பலால் பாதிக்கப்பட்டது நாகராஜன் மட்டும் அல்ல… பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் மற்றும் வணிகம் செய்யும் பலரும் இத்தகைய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் கேட்டு மிரட்டும் அந்த கும்பல்களுக்கு பணம் தர மறுக்கும் வணிகர்களும், சிறு தொழில் முனைவோரும் தாக்கப்படுவதும், பொய்வழக்குகளில் சிக்க வைக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. ஆனால், இதை காவல்துறை கட்டுப்படுத்தவே இல்லை.

மாமூல் வாங்குவதற்காக வன்முறை கும்பல் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இந்த பகுதியில் கடை நடத்த முடியாது; வன்கொடுமை வழக்கில் பொய்யாக சிக்க வைத்து விடுவோம் என்பது தான். பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற மாவட்டத்திலும் மாமூல் கேட்டு மிரட்டும் கும்பலால் பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரும், வணிகர்களும் பாதிக்கப்பட்டு, இன்று வரை அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தாலும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வன்கொடுமை சட்டத்தை ஆயுதமாக வைத்து பணம் பறிக்கும் கும்பல்கள் மீது காவல்துறையினர்  உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாகராஜனை போன்று ஏராளமானோர் படுகொலையாகும்   ஆபத்து இருக்கிறது. இதை தமிழகக் காவல்துறையினர் உணர்ந்து கொண்டு, மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலைக் கட்டுப்படுத்த அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

நாகராஜன் கொலையில் கூட நியாயமான முறையில் விசாரணை நடைபெறுமா? என்பது தெரியவில்லை. நாகராஜன் படுகொலையில்  5 பேர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், பிரபாகரன் மட்டும் தான் பெயர் குறிப்பிட்டு சேர்க்கப்பட்டிருக்கிறார். மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை கண்டுகொள்ளாமல்  இருப்பதும், மறைமுக ஆதரவு அளிப்பதும் தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாக்க எந்த வகையிலும் உதவாது. இதை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.

நாகராஜன் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்து சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். நாகராஜன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாமூல் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.