தென் கொரியாவின் நம்பர் 1 பணக்காரர்: Kim Beom-su | யார் இவர்?

சியோல்: ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தென் கொரிய நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் Kim Beom-su. எளிய பின்னணியில் இருந்து வளர்ந்து வந்த அவரது வெற்றிக் கதையை அறிவோம்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து. வறுமையில் வாடி. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி. பின்னர் Kakao நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் வெற்றி கண்டவர் கிம். சினிமா பட கதை போல இதனை சொல்வது எளிது. ஆனால் அதை வாழ்ந்து பார்த்தவர் அவர். பிரையன் கிம் (Brian Kim) என்ற பெயரிலும் இவர் அறியப்படுகிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 9.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பாதிக்கும் மேலான தனது சொத்துகளை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவேன் என ‘The Giving Pledge’-இல் உறுதி அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார் அவர்.

யார் இந்த Kim Beom-su? கடந்த 1966 வாக்கில் பிறந்தவர் கிம். அவருக்கு வயது 56. சியோல் நகரில் ஏழ்மையான குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் வசித்துள்ளார். ஒரு அறை கொண்ட அப்பார்ட்மெண்டில் வளர்த்துள்ளார். அவரது அப்பா, பேனா கம்பெனி ஒன்றில் பணியாற்றியுள்ளார். அம்மா, உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வாழ்வாதாரத்தை ஈட்ட அவரது பெற்றோர் போராடியுள்ளனர்.

வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள். அதில் மூன்றாவதாக பிறந்தவர் கிம். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலை பட்டம் முடித்தவர். அவரது குடும்பத்தில் கல்லூரி சென்ற முதல் நபர் கிம் தான். கல்வி கட்டணத்திற்காக தனியார் பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணியாற்றி, அதில் கிடைத்த தொகையை பயன்படுத்தியுள்ளார்.

“என் பெற்றோருக்கு எங்களை கவனித்துக் கொள்ள நேரம் இல்லாத காரணத்தால் நாங்களாகவே எங்கள் பாதைகளை உருவாக்க வேண்டியிருந்தது” என பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

வேலை: 1998-இல் சாம்சங் நிறுவன தகவல் தொழில்நுட்ப பிரிவில் டெவலப்பராக பணியாற்றினார் கிம். அதுதான் அவரது முதல் வேலை. தொடர்ந்து Hangame என்று கேமிங் போர்ட்டலை தொடங்கினார். பின்னாளில் அது தென் கொரியாவில் பிரபல கேமிங் தளமாக உருவானது. அதற்கு தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கொடுத்த நிதியை முதலீடாக பயன்படுத்தி உள்ளார். பின்னர் என்.ஹெச்.என் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். தொடர்ந்து சிலிகான் வேலியில் சில காலம் பணி செய்துள்ளார்.

Kakao தொடக்கம்: பின்னர் தான் Kakao நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 2010-இல் இந்நிறுவனத்தை Kakao டாக் என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார் கிம். தென்கொரியாவின் நம்பர் 1 மெசேஜிங் அப்ளிகேஷனாக இது உருவானது. தென் கொரியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களில் 93 சதவீதம் பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருவதாக தகவல். அதுமட்டுமல்லாது Kakao டாக் சுமார் 130 நாடுகளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம் எனவும் தகவல்.

தனக்கு பின்னர் தனது வாரிசுகள்: Kakao-வின் ஹோல்டிங் நிறுவனத்தில் தனது மகன் மற்றும் மகளை கடந்த 2020 வாக்கில் கிம் பணியமர்த்தி உள்ளதாக அந்த நாட்டு பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு தலா அறுபதாயிரம் Kakao பங்குகளை கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன் மதிப்பு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிகிறது.

இவர் மீது சூதாட்ட புகாரும் உள்ளது. கடந்த 2007-இல் லாஸ் வேகஸில் சுமார் 16,993 அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார் கிம். இந்த விவகாரம் 2015-இல் பொது வெளியில் கவனத்திற்கு வந்தது.

கடந்த 2021 வாக்கில் பாதிக்கும் மேலான தனது சொத்துகளை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவேன் என ‘The Giving Pledge’-இல் உறுதி அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் கிம். எலான் மஸ்க் மற்றும் மெலிண்டா கேட்ஸ் போன்ற பிரபலங்கள் இந்த உறுதியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் உள்ள பிசினஸ் வாய்ப்புக்காக அவர் தனது Kakao நிர்வாகக் குழு பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் உள்நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது.

உங்களது அடுத்த முயற்சியிலும் வெற்றி பெற வாழ்த்துகள் கிம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.