பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி – சீமான்.!

பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டியிருப்பதாவது,

“தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு, உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது. நியாயமும், நீதியும் பக்கமிருந்தும் அரசியல் தலையீட்டாலும், அதிகார முறைகேட்டாலும் இவ்வளவு ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட தம்பியின் விடுதலை இன்றைக்கு சாத்தியப்படவிருப்பது அளப்பெரும் மனமகிழ்வைத் தருகிறது.

அரசியலமைப்புச்சாசனத்தைத் துளியளவும் மதியாது, கூட்டாட்சித்தத்துவத்தைக் கேலிப்பொருளாக்கி, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்து வந்த ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் கொடுத்த சவுக்கடியாகவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இக்கூற்றைப் பார்க்கிறேன். 

ஆகவே, இனியும் தாமதிக்காது, 161வது சட்டப்பிரிவின்படி எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தமிழகச் சட்டமன்றத்தீர்மானத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.