இலங்கையின் பரந்தளவான தேவைகளை தொடர்ச்சியாக நிறைவேற்றிவரும் இந்திய உதவிகள்

2022ஆம் ஆண்டில் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான பொருளாதார உதவியானது இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் பரந்தளவிலான தேவைகளை நிறைவேற்றுவதில் மிகவும் வலுவான ஆதாரமாக காணப்படுகின்றது.

2.  உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திட்டமானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுடன், அத்திட்டத்தின் கீழ் புதுவருடத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட 16000 மெட்ரிக்தொன் அரிசி நாடளாவிய ரீதியில் உள்ள சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இச்சலுகைக் கடன் அடிப்படையில் இந்தியாவால் வழங்கப்படவுள்ள பொருட்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது.  அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவமளித்து இந்திய அரசாங்கம் இந்த விநியோகங்களை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள்,  மருந்துகள் மற்றும் உற்பத்தித்துறை சார்ந்த மூலப்பொருட்கள் போன்றவையும் ஏனைய பொருட்களுடன் மேலதிக தொகுதிகளாக விநியோகிக்கப்படுகின்றன.

 3.        அது மாத்திரமல்லாமல் டீசல், பெற்றோல் மற்றும் விமான எரிபொருள் போன்ற பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றொரு கடன் உதவித் திட்டம் வழிசமைப்பதுடன் இதன் காரணமாக பல்வேறு வகை எரிபொருட்களுடனான 9 தொகுதிகளை வழங்குவதற்கு வழிகோலப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் போன்றவை நாடளாவிய ரீதியில் உள்ள 1300 CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டு இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. இக்கடன் உதவித் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 400,000 மெட்ரிக்தொன் எரிபொருள் இதுவரை விநியோகிக்கப்பட்டிருப்பதுடன் மேலும் பல தொகுதி எரிபொருள் விரைவில் வந்தடையவுள்ளன.

4.         ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கியால் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை 2022 மார்ச் வரையில் ஒத்திவைத்தமையின் காரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பானது மேலும் வலுவடைந்துள்ளது. இந்நிதிசார் நடவடிக்கையானது தற்போதைய 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் ஊடாக மேலும் வலுவூட்டப்பட்டதுடன் 2022 ஏப்ரல் 18ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

5.         பல்வேறு வடிவங்களிலான பொருளாதார உதவிகள் ஏனைய ஆதரவுகள் மூலமாக மேலும் வலுவாக்கப்பட்டுள்ளன. 2022 ஏப்ரல் 29ஆம் திகதி ஒரு தொகுதி  மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே  அவர்களால் சுகாதார அமைச்சர் கௌரவ சன்ன ஜயசுமன அவர்களிடம் கொழும்பில் கையளிக்கப்பட்டது. இத்தொகுதி மருந்துப் பொருட்கள் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளன. இலங்கை மக்களின் நலன்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தினை இவ்வாறான பல்நோக்கு அடிப்படையிலான உதவிகள் நிரூபிக்கும் அதேநேரம் அயலுறவுக்கு முதலிடம் மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாடு ஆகிய இரட்டை கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறான செயற்பாடுகள் வழிநடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

03 மே 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.