சென்னை:
விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
புலன் விசாரணையில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக புகார்கள் வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். காவல் நிலையத்தில் நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் வந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது என்றும் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், குறிப்பாக, காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது என்றும் டிஜிபி சைலேந்திர பாபு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.