தஞ்சாவூர்: மதுரை ஆதீனத்தின் சொத்துகளை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்வதாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் விபத்து நிகழ்ந்த இடத்தை இன்று மாலை மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டும், அப்பர் மடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பார்த்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழாவை ஒவ்வொரு ஆண்டும் அடியார் பெருமக்கள் சிறப்பாக நடத்தி வந்துள்ளனர். ஆனால், தற்போது நடைபெற்ற இந்த தேர் விபத்து ஒரு துயரமாக இருக்கிறது.
ஒரு தேர் வருவதாக இருந்தால் மின்சாரத் துறை உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதேபோல் சாலையை நெடுஞ்சாலைத்துறை சீரமைத்து கொடுத்திருக்க வேண்டும். யார் மேல தவறு உள்ளது என்பது கடவுளுக்கே வெளிச்சம். இதுபோன்ற விபத்து இனி நடக்கக் கூடாது. போன உயிர் போனதாக இருக்க வேண்டும். இனிமேலாவது அரசு கவனமுடன் இருக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மதுரை ஆதீனத்தின் சார்பில் பிரார்த்திக்கிறேன்.
மதுரை ஆதீன கோயில்களின் இடங்களை குத்தகைக்கு வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்கின்றனர். முன்பிருந்த சன்னிதானத்தின் உடல்நிலை சரியில்லை என்பதை காரணமாக வைத்துக் கொண்டு அவர்கள் குத்தகை கொடுக்கவில்லை. முன்பிருந்த சன்னிதானம் குத்தகையும் கேட்கவில்லை. நான் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள், சட்டமன்றத்தில் கோயில் திருப்பணி செய்யுமாறு கூறுகின்றனர். குத்தகையை கொடுத்தால்தானே கோயில் திருப்பணி செய்ய முடியும். குத்தகையும் கொடுப்பதில்லை, நிலத்தின் வரியும் கொடுப்பதில்லை, கோயில் இடத்தில் வீடு கட்டிக் கொண்டு வாடகையும் கொடுப்பதில்லை. இதை கேட்டால் என்னை அடிப்பேன் என மிரட்டுகின்றனர். நீ திருப்பணி செய்து விடுவாயா என மிரட்டுகின்றனர். ஆனால், சட்டமன்றத்தில் மட்டும் கோயில் திருப்பணி செய்யவில்லை என பேசுகின்றனர். இதில் எல்லா அரசியல் கட்சியினரும் உள்ளனர். ஆனால், ஆளுங்கட்சியினர்தான் அதிகம் இடத்தை வைத்துள்ளனர்.
பட்டினபிரவேசம் என்பது 500 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மதசார்பற்ற நாடு என சொல்லிக்கொண்டு ஒரு மதத்தை மட்டும் கட்டுப்படுத்துவது ஏன்? இந்து சமயத்தை அழிக்க ஆங்கிலேயர்களாலே முடியாதபோது, இவர்கள் என்ன செய்து விட முடியும்? இதையெல்லாம் மேலே உள்ள கடவுள் பார்த்துக் கொள்வார்.
நான் எனது மடத்துக்குட்பட்ட கஞ்சனூர் கோயிலுக்கு செல்கிறேன். யாரும் என்னை தடுக்க முடியாது. அந்தக் கோயிலுக்கு உட்பட்ட பகுதியில் மடத்தின் சொத்துகளை வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர், குத்தகையை கொடுக்க மறுக்கின்றனர். கோயில் திருப்பணியை செய்து விடுவாயா என மிரட்டுவதால், எனது உயிருக்கு ஆபத்து என்றால் நான் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து ஆளுகட்சி குறித்து பேசுவேன். மேற்கொண்டு என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்”என்றார்.