கரூரில் சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறி பிரியாணி கடையை மாநகராட்சி அதிகாரிகள் மூடிய நிலையில், கடை ஊழியர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“கரூர் பிரியாணி சென்டர்” என்ற பெயரில் உழவர் சந்தை பகுதியில் இயங்கி வரும் அந்த பிரியாணி கடையில், சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாகவும் கடைக்கு வரும் வாகனங்களை சாலையோரத்திலேயே நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் மாநகராட்சி நிர்வாகத்துக்குப் புகார்கள் சென்றன. இதனையடுத்து கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், குற்றச்சாட்டை உறுதி செய்தனர்.
மேலும் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு கடையை மூடியபோது ஊழியர்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.