ஜெயக்குமார், செம்மலை… ராஜ்யசபா 2 எம்.பி பதவிக்கு முட்டி மோதும் அ.தி.மு.க தலைகள்!

ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், அதிமுகவுக்கு 2 ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிமுக முக்கிய தலைகள் பலரும் ராஜ்ய சாஅ எம்.பி. பதவிக்கு முட்டிமோதி காய்களை நகர்த்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுகவில் இருந்தும் எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்தும் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் என ராஜ்யசபாவில் ஜூன் 29 ஆம் தேதி தமிழகத்தின் சார்பில் 6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள் காலியாகின்றன. அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி.க்களாக உள்ள எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோர் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகின்றனர்.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், ராஜ்ய சபாவில் அதிமுகவுக்கு நான்காவது உறுப்பினராக ஆர். வைத்திலிங்கம் இருந்தார். அவர் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.-வாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அவர் தனது ராஜ்ய சபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். வைத்திலிங்கம் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்ததால், அவருடைய இடம், அதிகமான எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட திமுகவுக்கு கிடைத்தது. அதனால், இப்போது அந்த இடத்தில் திமுகவைச் சேர்ண்டஹ் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ராஜ்ய சபா எம்.பி.யாக உள்ளார்.

இந்த சூழ்நிலையில்தான், தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்தின் சார்பில் ராஜ்ய சபாவில் 6 இடங்கள் காலியாக உள்ளன. இதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அதனால், அதிமுகவில் 2 ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட தலைகள் முட்டி மோதுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில், குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் செம்மலை ஆகிய இருவருக்கும் வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் 2 ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு விருப்பப்படும் சுமார் 60 தலைகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், இந்த 2 ராஜ்ய சபா எம்.பி இடங்களை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் தலா 1 இடம் என தங்கள் ஆதரவாளர்களுக்கு அளிக்க பங்கீட்டுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் 2 ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.செம்மலை, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், பா.வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல், அதிமுக வழிநடத்தல் குழு உறுப்பினர், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளர் மற்றும் முன்னாள் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர்; அதிமுக செய்தி தொடர்பாளரும், கோவை மேற்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ கே.செல்வராஜ்; முன்னாள் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், திருவள்ளூர் எம்பியுமான பி.வேணுகோபால்; அதிமுக தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் ஆகியோரும் ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு காய் நகர்த்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், அதிமுக நிர்வாகிகளில் ஒரு பகுதியினர், ராஜ்ய சபா எம்.பி. பதவியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு அதிமுகவில் செம்மலை, ஜெயக்குமார், சிவி.சண்முகம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோரின் பெயர்கள் அதிகம் பேசப்பட்டாலும், இன்னும் சிலரின் பெயர்களும் அடிபடுகின்றன. அதற்கான காரணங்களையும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து அதிமுகவின் குரலை ஊடகங்களில் மிகச் சரியாக ஒலித்து வந்தவர். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த மூத்த தலைவராக இருந்துள்ளார். அதே போல, அதிமுகவில் உறத்துக் குரல் கொடுக்கும் தலைவர்களில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முக்கியமானவர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சி.வி. சண்முகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த செம்மலைக்கு, சட்டமன்றத் தேர்தலில் சீட்டு வழங்கப்படாததால், அவருக்கு அவருக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் அளிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு உறுதியளித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதே போல, அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஏற்கெனவே, ராஜ்ய சபா எம்.பி.யாக (2001- 2007) இருந்துள்ளார். அவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்டு வந்துள்ளார் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

அதிமுகவின் ஜே.சி.டி பிரபாகரும் ராஜ்ய சபா எம்.பி பதவி கேட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1980 மற்றும் 2011ல் வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஜே.சி.டி பிரபாகர். இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவு என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். கடந்த ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் ஜே.சி.டி. பிரபாகர் மீண்டும் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டாலும், சென்னையில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. குறிப்பாக ஆதிதிராவிடர் சமூகத்தில் இருந்து, ராஜ்ய சபா உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்காததால், ஆதிதிராவிடர்களிடையே அதிமுகவின் செல்வாக்கை திமுக கைப்பற்றி வருகிறது என்ற எண்ணத்தின் அடிப்படையில், டாக்டர் வேணுகோபாலுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி அளிக்க வாய்ப்பு உள்ளதாக அதிமுகவின் மற்றொரு வட்டாரம் தெரிவிக்கின்றனர்.
தற்போது, அதிமுகவில் உள்ள பட்டியல் இனத்தவரில் இருந்து அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் மட்டும் ராஜ்ய சபா எம்.பி.யாக உள்ளார். இப்படி, 2 ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு அதிமுகவில் சுமார் 60க்கும் மேற்பட்ட தலைகள் முட்டி மோதி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக காலியாக உள்ள ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், ராஜ்ய சபா எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.