போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் அடித்து கொலை சம்பவத்தில் அதிர்ச்சி தகவல். வீடியோ கால் மூலம் வந்து உரிமையாளரே அடித்து கொலை செய்ய சொன்னதாக கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம். அது குறித்து தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜி நேற்று சந்தேகமான முறையில் உயிரிழந்தார். தனது கணவரின் முகத்தில் அடித்த காயம் இருப்பதாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராஜியின் மனைவி கலா அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாசாலை போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்திய போது, ராஜியை மாப் கட்டையால் தாக்கி சுடு தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதால் இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி ஊழியர்களான யுவராஜ், கேசவன், செல்வமணி, சரவணன், சதீஷ், மோகன், பார்த்தசாரதி ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கைதான 7 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உரிமையாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வராமல், வீடியோ கால் மூலம் பேசி உயிரிழந்த ராஜ் உடல் முழுவதும் அடிக்க சொல்லி கொலை செய்ய கூறியதாக கைதான 7 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வந்த கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதும், முன்னாள் மாநகராட்சி ஊழியர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் 20 ஆயிரம் கட்டணம் வசூல் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாநில மனநல ஆணையத்திடம் அனுமதி பெறாமல் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையத்தை கார்த்திக்கேயன் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரின் குடும்பத்தினரிடம் இங்கு அடித்து கொடுமைபடுத்துவதாக ராஜி தெரிவித்ததால், வேறு மையத்திற்கு அந்த நபரை சேர்த்ததால் உரிமையாளர் கார்த்திகேயன் ராஜி மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இது தொடர்பாக ராஜின் மகன் மணிகண்டனை அழைத்து மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ராஜி சிகிச்சை பெற வந்த போது, வீடியோ காலில் ஊழியர்களிடம் பேசி உடல் முழுவதும் தாக்கி ராஜியை கொலை செய்ய சொன்னதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஊழியர்கள் ராஜியை அடித்து கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதை மறுவாழ்வு மையத்தை அனுமதி இல்லாமல் நடத்தி வந்து ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டிய லோகேஸ்வரி மற்றும் அவருடைய கணவர் கார்த்திகேயன் இருவரையும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் வருவாய்த்துறையினர் அந்த மையத்திற்கு சீல் வைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM