காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்போது, காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மத்திய நிதியமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ப. சிதம்பரத்திற்கு எதிராக, விவசாயப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனமான கெவென்டர் சார்பில் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் உணர்வுடன் விளையாடுகிறார் என்று குற்றம் சாட்டிய வழக்கறிஞர்கள், திரிணாமுல் காங்கிரஸ் அரசு தனியார் நிறுவனமான மெட்ரோ டெய்ரியின் பங்குகளை விற்றதை எதிர்த்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி வழக்கு தொடர்ந்துள்ளதால் அவர் அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜராகுவது ஏற்புடையதல்ல என்று கூறினர்.
ப. சிதம்பரம் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் உறுப்பினர், மிக முக்கியமான தலைவர் என்று கூறிய வழக்கறிஞர் கவுஸ்தவ் பாக்சி, தான் ஒரு வழக்கறிஞராக இல்லாமல், காங்கிரஸ் கட்சியின் தொண்டராக போராட்டத்திற்கு தலைமை தாங்கியதாகக் கூறினார். மேலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் நலன்களுக்கு எதிராக செயல்படும் எந்த தலைவரையும் காங்கிரஸ் கட்சியினர் ஒரே மாதிரியாகத்தான் நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரியை பிடிஐ செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டபோது, இந்த ஆர்ப்பாட்டம் சில காங்கிரஸ் ஆதரவாளர்களின் இயல்பான தன்னிச்சையான எதிர்வினை என்று கூறினார்.
“கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இருந்த சில காங்கிரஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கேள்விப்பட்டேன். இது அவர்களின் இயல்பான எதிர்வினை என்று நான் நம்புகிறேன்” என்று பெர்ஹாம்பூரில் இருந்து ஆதிர் சவுத்ரி கூறினார்.
இந்த வழக்கை எதிர்த்துப் வாதிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குறித்து ஆதி சவுத்ரி கூறுகையில், தொழில்முறை உலகில் ஒருவர் தனது விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என்று கூறினார்.
மேலும், “இது ஒரு தொழில்முறை உலகம். அதில் விருப்பம் என்பது அந்த நபரைப் பொறுத்தது… யாரும் ஒருவருக்கு ஆணையிட முடியாது” என்று ஆதிர் சவுத்ரி கூறினார்.
ப.சிதம்பரத்தை பிடிஐ செய்தி நிறுவனம் தொடர்புகொண்டு கேட்டபோது, “இது ஒரு சுதந்திர நாடு. நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதற்கு நான் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க அரசும், கெவென்டர் அக்ரோ நிறுவனமும் இணைந்து வைத்திருந்த மதர் டெய்ரியின் பங்குகளை தனியார் பங்குதாரருக்கு மிகவு குறைவான விலையில் விற்றதாகக் கூறி, மே.வ காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த விற்பனையால் மாநிலத்தின் நலன் மோசமாகப் பாதிக்கப்பட்டது என்று கூறிய ஆதிர் சவுத்ரியின் வழக்கறிஞர் பிகாஷ் பட்டாச்சார்யா, கெவென்டர் பங்குகளின் ஒரு பகுதியை சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கு விரைவில் அதிக விலைக்கு விற்றதாகக் கூறினார்.
கெவென்டருக்கு நியாயமான முறையில் பங்குகளை விற்றுள்ளதாகவும், அதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் மேற்கு வங்க மாநில அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ப. சிதம்பரம் ஆஜரான நிறுவனமும் இந்த வாதத்தை ஆதரித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“