வேதாரண்யம்: குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடி – 7 பேர் கைது!

நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதும், இலங்கையிலிருந்து வேதாரண்யத்திற்கு தங்கம் கடத்துவதும், கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது, தங்கம், கஞ்சா கடத்தலின்போது போலீஸில் சிக்கும். வேதாரண்யம் வந்தால் இலங்கையிலிருந்துவரும் கடத்தல் தங்கத்தைக் குறைந்த விலைக்கு வாங்கலாம் என்று பலர் வந்து ஏமாந்து விடுகின்றனர்.

இதுகுறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு சிலர் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

தங்கம் தருவதாக மோசடி – 7 பேர் கைது

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் அங்கு பிரபலமான  நகைக்கடை வைத்துள்ளார். இவருக்கும் சின்னசேலத்தைச் சேர்ந்த தியாகு ஆசாரி என்பவருக்கும்  வியாபார ரீதியாக பழக்கம் இருந்துள்ளது. தற்சமயம் அட்சய திரிதியை வந்ததால் குறைந்த விலைக்கு அதாவது, கிராமிற்கு ரூ. 400 குறைத்து தங்கம் வாங்கித் தருவதாக கூறினாராம் தியாகு. இதை நம்பி அவர் மூலமாக கள்ளக்குறிச்சி முருகன் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த பண்டேரிநாதன்  என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசி,  2 கிலோ தங்கம் வாங்க ஏற்பாடு செய்துள்ளார். 2 கிலோ தங்கம் வாங்க ரூ. 96 லட்சம் பணத்துடன்  கருப்பம்புலத்திற்கு முருகன் வந்துள்ளார். அப்போது பண்டேரிநாதன் அவரிடம் 850 கிராம் எடைக்கொண்ட தங்கத்தை கொடுத்து விட்டு, “பாக்கியை நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள்” என்றுகூறி அனுப்பி விட்டாராம்.

இதைப் பெற்றுக்கொண்ட முருகன், தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகை கொடுத்து விட்டு தனியே சென்றபோது, பண்டேரிநாதன் தனது ஆட்களை அனுப்பி முருகனை மிரட்டி தாக்கி ,அவரின் தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்றுவிட்டாராம்.

தங்கம் தருவதாக மோசடி – 7 பேர் கைது !

பாதிக்கப்பட்ட முருகன் வேதாரண்யம் போலீஸில் புகார்  செய்துள்ளார்.  புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி முருகவேல், இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தனிப்படை போலீஸார் இந்த மோசடியில் தொடர்புடைய கருப்பம்புலத்தைச் சோ்ந்த பண்டேரிநாதன், கார் டிரைவர் திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ், சென்னையைச் சேர்ந்த பாலகுமார், திருத்துறைப்பூண்டி எழிலுரைச் சேர்ந்த துர்காதேவி, கருப்பம்புலம் செல்லத்துரை, வடமழை மணக்காடு, தனுஷ்கொடி, திருத்துறைப்பூண்டி மணிமாறன் ஆகியோரைக் கைது செய்தனர். இதில் தொடர்புடைய பலரையும் தேடி வருவதாக தெரிகிறது. இவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.