மதுவிலக்கு அமலில் இருந்து என்ன பயன்… ஸ்டேஷனில் ரயிலை நிறுத்திவிட்டு சரக்கு அடிக்க சென்ற டிரைவர்: பீகாரில் ரயில் பயணிகள் கடும் கோபம்

சமஸ்திபூர்: பீகாரில் ரயில் டிரைவர் ஒருவர் மது குடிப்பதற்காக, ரயிலை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருந்தும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அவ்வப்போது கள்ளச்சாராயம் குடித்து மக்கள் பலியாகும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில், சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தின் ஹசன்பூர் ஸ்டேஷனில் இருந்து சமஸ்திபூர்-சஹர்சா பயணிகள் ரயில் நின்றிருந்தது. உதவி லோகோ பைலட் (டிரைவர்) கரண்வீர் பிரசாத் யாதவ் என்பவர், ரயிலை தொடர்ந்து இயக்காமல் மாயமானார். சிக்னல் கொடுத்த பிறகும் ரயில் நகராததால், அதிர்ச்சியடைந்த ஸ்டேசன் மாஸ்டர் உதவி லோகோ பைலட் மாயமானது குறித்து  விசாரிக்க தொடங்கினார். ரயிலில் அமர்ந்திருந்த பயணிகளும் பொறுமையிழந்து, உதவி லோகோ பைலட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்பகுதியை  சுற்றிலும் தேடிப் பார்த்த போது, ​​​​அருகில் உள்ள சந்தையில் மதுவாங்கிக் குடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. நிமிர்ந்து நிற்கக்கூட முடியாத  அளவுக்கு குடிபோதையில் அவர் இருந்தார். உடனடியாக அவரை ரயில்வே போலீசார் மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் மாற்று லோகோ பைலட் உதவியுடன் மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. இதுகுறித்து சமஸ்திபூர் டிஆர்எம் அலோக் அகர்வால் கூறுகையில், ‘சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. லோகோ பைலட்டுக்கு எதிராக வழக்குபதியப்படும். அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.