இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்பு, 6167 வழக்குகளில் தீர்வு: தமிழக அரசு தகவல் 

சென்னை: கடந்த 2021 மே முதல் 2022 மார்ச் வரை 133 திருக்கோயில்களுக்கு சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக இன்று காலை பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்துசமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் வருவாய் நீதிமன்றங்கள் மற்றும் நிலங்கள் மீட்டல் தொடர்பாக வெளியிடப்பட்டுல்ள தகவல்கள்:

> தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை, லால்குடி, மன்னார்குடி, நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

> கும்பகோணம், சேலம் மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் வருவாய் நீதிமன்றங்களின் முகாம் இயங்கி வருகின்றன.

> இந்துசமய அறநிறுவனங்களுக்குச் சொந்தமான வேளாண் நிலங்களுக்கு வரவேண்டிய குத்தகை நிலுவைத் தொகைகளை வசூல் செய்யவும், வேளாண் நிலங்களுக்கு குத்தகைத் தொகை நிர்ணயிக்கவும், குத்தகை செலுத்த மறுக்கும் குத்தகைதாரர்களை வெளியேற்றவும் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு பொது பொறுப்புரிமை (வேளாண்மை நிலங்களின் ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் இந்துசமய அறநிறுவனங்களால் தனி துணை ஆட்சியர் தலைமையிலான வருவாய் நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவை தீர்வு செய்யப்படுகின்றன.

> வருவாய் நீதிமன்றங்களின் முன்பாக நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 11,418 ஆகும். இவற்றில் 6167 வழக்குகளில் 2022 மார்ச் 31-ம் தேதி வரை தீர்வு காணப்பட்டுள்ளன.

> ரூ.1768.03 லட்சம் குத்தகை நிலுவைத் தொகைக்கு தீர்பாணை பெறப்பட்டு, இதுவரை ரூபாய் 476.69 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

> இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள், நிலவுடமை பதிவு மேம்பாட்டுத் திட்ட நடவடிக்கையின்போது, தனி நபர் பெயரில் தவறுதலாகப் பட்டாமாற்றம் செய்யப்பட்ட இடங்களைக் கண்டறிந்து திருக்கோயில் நிருவாகத்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்து உத்தரவு பெற்று நிலங்கள் மீட்கப்படுகின்றன. கடந்த 2021 மே 7-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் 133 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

> இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள், வருவாய்த் துறையில் கணினிச் சிட்டா தயாரிக்கும் போது தவறுதலாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான இனங்களைக் கண்டறிந்து திருக்கோயில் நிருவாகத்தால் சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து உத்தரவு பெற்று நிலங்கள் மீட்கப்படுகின்றன. இதுவரையில் 94 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 592.69 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.