இந்திய நிகழ்வுகள்
குஜராத் எம்.எல்.ஏ.,வுக்கு மற்றொரு வழக்கில் சிறை
மேஷானா-அனுமதி பெறாமல் பேரணி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானிக்கு, மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஜிக்னேஷ் மேவானி, கடந்த தேர்தலில்சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
பிரதமர் மோடியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மேவானி சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பெண் காவலரை தாக்கிய வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.கடந்த, 2017ல், போலீஸ் முன் அனுமதி பெறாமல், பேரணி நடத்தியதாக மேவானி உள்ளிட்டோர் மீது மேஷானா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் மேவானி உட்பட, 10 பேருக்கு, தலா மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுஉள்ளது.
மதம் மாறி திருமணம் செய்த தங்கை மாப்பிள்ளையை கொன்ற அண்ணன்
ஹைதராபாத்,-தங்கை மதம் மாறி திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த அண்ணன், தங்கையின் கணவரை கடப்பாரையால் குத்திக் கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. எதிர்ப்பை மீறி மணம்இங்கு, ரெங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜு 30, செகந்திராபாத் நகரைச் சேர்ந்த அஸ்ரி சுல்தான் என்ற பெண்ணை காதலித்தார். பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி, ஜனவரி 22ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்துக்குப் பின், அஸ்ரி சுல்தான் தன் பெயரை பல்லவி என மாற்றிக் கொண்டார்.
இதையறிந்த அஸ்ரியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் ஆத்திரம் அடைந்தனர்.சகோதரர் வாக்குமூலம்அஸ்ரியின் சகோதரர்கள் தன்னை தேடுவதை அறிந்த நாகராஜு, காதல் மனைவியுடன் விசாகப்பட்டினம் சென்று, அங்கு நான்கு மாதங்கள் தலைமறைவாக இருந்தார். பின் அஸ்ரி குடும்பத்தினர் சமாதானம் ஆகியிருப்பர் என கருதிய அவர், தன் மனைவியுடன் மீண்டும் ஹைதராபாத் வந்தார்.
இதையறிந்த அஸ்ரி சுல்தானின் சகோதரர் செய்யது மொபின் அகமது மற்றும் அவரது நண்பர்கள், நேற்று முந்தினம் நாகராஜுவை கடப்பாரையால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, செய்யது மொபின் அகமதுவை கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். ”எதிர்ப்பையும் மீறி என் தங்கை ஹிந்து மதத்தை சேர்ந்த நாகராஜுவை திருமணம் செய்ததால் கொலை செய்தேன்,” என செய்யது மொபின் அகமது வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அரசு மருத்துவமனையில் குழந்தையை குதறிய எலிகள்
தன்பாத்,-ஜார்க்கண்ட் அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங் குழந்தையின் கை, கால்களை எலிகள் கடித்துக் குதறியதால், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, கிரிதிஹ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த மாதம் 29ல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.அடுத்த நாள் குழந்தையை பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையின் கை, கால்களை எலிகள் கடித்து குதறியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் டாக்டர்களிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து, தன்பாத் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு, அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவத் துறை அதிகாரிகள், கிரிதிஹ் மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள்இருவர் மற்றும் ஒரு துப்புரவு தொழிலாளர்ஆகியோரை ‘சஸ்பெண்ட்’ செய்தனர். மேலும், மருத்துவமனையின் தலைமை டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க, தலைமைச் செயலருக்கு பரிந்துரை செய்து உள்ளனர்.
தமிழக நிகழ்வுகள்
மதுரையில் விதி மீறிய 67 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரை-மதுரையில் விதிமீறிய ஆட்டோக்களுக்கு போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தனர். 11 ஆட்டோக்களை பறி முதல் செய்தனர்.நேற்று மாலை நகரின் பல்வேறு இடங்களில் போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகச்சாமி தலைமையில் உதவி கமிஷனர்கள் திருமலைக்குமார், மாரியப்பன் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிங்காரவேலு, செல்வகுமார், சித்ரா, ஆய்வாளர்கள் கமலா, சக்திவேல், முரளி, அனிதா சோதனையிட்டனர். அதில் உரிமம் பெறாதவை 2 ஆட்டோக்கள், தகுதிச்சான்று இல்லாதது 10, மீட்டர் இல்லாதது 19, சரியான இருக்கை பொருத்தாதது 6, காப்பீடு இல்லாதது 4, போக்குவரத்து விதி மீறலுக்காக 11, ஓட்டுனர் உரிமம் இல்லாதவை 16 என்பது போன்ற விதிமீறல்களுக்கான சோதனையில் ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெண் தற்கொலை
ஆர்.எஸ்.மங்கலம்,-ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொட்டகுடி பாலசுப்பிரமணியன் மனைவி விஜயா 40. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்களின் திருமணம் குறித்து சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த விஜயா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பின்புறம் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் விசாரிக்கிறார்.
கார் எரிந்து நாசம்
தேவிபட்டினம்-தேவிபட்டினம் அருகே பனைக்குளம் கிழக்கு தெரு ஜலால் அகமது 36, ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.ஜவுளி வியாபாரத்துக்காக பயன்படுத்தும் காரை, இரவு வீட்டின் முன்நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் தீப்பற்றி கார் முழுவதும் எரிந்து நாசமானது. தேவிபட்டினம் போலீசார் கார் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
தாய்க்கு தீ வைக்க முயன்ற மகன் கைது
திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே சொத்து பிரச்னையில் தாய் உட்பட 3 பேர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்ற மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன்கள் சின்னதுரை, 41; வேணுகோபால், 36; இருவருக்கும் இடையே நிலம் பாகப்பிரிவினை தொடர்பாக விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில் சம்பவத்தன்று, வேணுகோபால், சின்னதுரையின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த அவரது தாய் வசந்தாவிடம் சொத்து கேட்டு தகராறு செய்து, அவர் மீதும், சின்னதுரை மனைவி ஜோதி, 31; மீதும், மண்ணெண்ணெயை ஜோதி மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். இதில் வசந்தா, ஜோதி அவரது மகன் கவுதம் கார்த்திக் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மூவரும் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.ஜோதி கொடுத்த புகாரின்பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து வேணுகோபாலை தேடி வருகின்றனர்.
எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு
கச்சிராயபாளையம்-கச்சிராயபாளையம் அருகே எலி பேஸ்ட் சாப்பிட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன் மகள் ஆர்த்தி, 17; அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.இவர், கடந்த வாரம் நடந்த செய்முறை தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இதனை அவர்களது பெற்றோர் கண்டித்தனர். இதனால், மனமுடைந்த ஆர்த்தி கடந்த மாதம் 29ம் தேதி மாலை 5:00 மணியளவில் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.உடன், சேலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் அங்கு, நேற்று மதியம் 12:00 மணியளவில் இறந்தார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஷவர்மா கடைகளில் கிலோ கணக்கில் பழைய சிக்கன் பறிமுதல்
கேரளா மாநிலம் காசர்கோடில் பள்ளி மாணவி ‘ஷவர்மா’ கடையில் சிக்கன் சாப்பிட்ட சில மணி நேரங்களில் உயிரிழந்தார். கோழி இறைச்சியில் மசாலா தடவி நீண்ட கம்பியில் செருகி மின்அடுப்பில் வாட்டி அந்த இறைச்சியை சப்பாத்தியுடன் தரும் (ஷவர்மா) கடைகள் மதுரையில் பெருகியுள்ளன.
காசர்கோடு சம்பவத்தை தொடர்ந்து மதுரையில் உள்ள ‘ஷவர்மா’ கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: மதுரையில் 52 ‘ஷவர்மா’ கடைகளில் ஆய்வு நடத்தினோம். சிக்கனை சமைத்த பின் மீண்டும் ‘ப்ரீஸரில்’ பயன்படுத்தியது, பழைய சிக்கனை சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்ட கே.கே.நகர் பகுதி கடைகளில் இருந்து 3 கிலோ, திருமங்கலம் கடைகளில் 7 கிலோ சிக்கனை பறிமுதல் செய்து அழித்தோம்.
5 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 14 நாட்களுக்குள் கடைகளில் உள்ள உணவு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து வருகிறோம். பழைய, கெட்டுப்போன, சமைத்த உணவுகளை மீண்டும் பயன்படுத்தி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மதுரை, மே 6 -மதுரையில் ‘ஷவர்மா’ கடைகளில் 10 கிலோ அளவில் பழைய சிக்கன் மற்றும் ‘ப்ரீஸரில்’ வைக்கப்பட்ட சமைத்த உணவுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் மீது வழக்கு
சாத்துார்:சாத்துார் அருகே கத்தாளம்பட்டியில் எஸ்.பி.டி.பட்டாசு ஆலை வெடிவிபத்து ஒருவர் பலியானார். இவ்வழக்கில் உரிமையாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிந்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கத்தாளம்பட்டி எஸ்.பி.டி., பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சுந்தரக் குடும்பன் பட்டி சோலை விக்னேஷ், 26. பலியானார்.சிவகாசியை சேர்ந்த பெரியகருப்பன், இவரது மகன்கள் ராமச்சந்திரன், சிதம்பரம், மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சிதம்பரத்தை போலீசார் கைது செய்தனர். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.