வரும் 9, 10ம் தேதிகளில் நடக்கும் ரயில்வே தேர்வுக்கு 65 சிறப்பு ரயில்கள்: விண்ணப்பதாரர்களுக்காக சிறப்பு ஏற்பாடு

புதுடெல்லி: ரயில்வேயின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பம் சாராத பல ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான கணினி தேர்வை 2 கட்டமாக நாடு முழுவதும் ரயில்வே பணியாளர் வாரியம் நடத்துகிறது. வரும் 9, 10ம் தேதிகளில் இத்தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, அவர்களின் சொந்த ஊர் அல்லது மாநிலத்தில் இருந்து பல நூறு கிமீ தூரத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த இடங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் குறித்து விண்ணப்பதாரர்கள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், இத்தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்காக நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே 65 சிறப்பு ரயில்கள் மே 8ம் தேதி இயக்கப்பட உள்ளது. தேர்வுக்குப் பிறகும் அதே ஊர்களில் இருந்து இவை இயக்கப்படும். தேர்வு நடக்கும் ஊர்களுக்கு அதிகாலையில் இவை சென்று சேரும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் – சென்னை, திருநெல்வேலி -மைசூர் இடையிலும் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கட்டண சலுகை கிடையாது. ‘இந்த தேர்வுக்காக இயக்கப்படும் 65 சிறப்பு ரயில்களிலும் பயணிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டண சலுகை எதுவும் கிடையாது. பயணத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை  அவர்கள் செலுத்த வேண்டும்,’ என்று ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.