கரோனா தொற்று தடுப்பு பெயரில் சீனாவில் மனித உரிமை மீறல்கள்: சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரல்

பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில், மக்களை அடித்து துன்புறுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீனாவில் தற்போது கரானா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஷாங்காய், தலைநகர் பெய்ஜிங்கில் அதிகளவில் தொற்று பரவி உள்ளது. இந்நிலையில், தொடக்கம் முதலே கரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் திட்டம் என்ற பெயரில் சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது ஷாங்காயில் ஏராளமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கரோனா தடுப்பு மையம்(தனிமைப்படுத்துதல்) என்ற பெயரில் ஷாங்காயில் ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் சீன நிர்வாகம் அடைத்து வைத்துள்ளது. அங்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள், அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘நேஷனல் ரிவியூ’ என்ற இதழ் சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சீனாவில், ‘பெருந்தொற்று தடுப்பு’ என்ற பெயரில் மக்களை அதிகாரிகள் துன்புறுத்தி வருகின்றனர். இது சீனாவின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.

அதிபர் ஜி ஜின்பிங்கின் உத்தரவை செயல்படுத்தும் மருத்துவர்கள் அணியும் அங்கியை அணிந்து வரும் அதிகாரிகள் ஷாங்காய் உட்பட பல இடங்களில் மக்களை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

கரோனாவை தடுப்பதாககூறி, மக்களை அப்புறப்படுத்துகின்றனர். அல்லது அவர்கள் வெளியில் வர முடியாதபடி இரும்பு கதவுகளை வெல்டிங் செய்து விடுகின்றனர். இதனால் ஷாங்காயில் வசிக்கும் மக்கள் தற்போது அரசுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். மக்களின் இந்த பாதிப்பு ஷாங்காயில் மட்டுமல்லாமல், சீனாவில் பல நகரங்களுக்கும் பரவி உள்ளது.

சீனாவின் கடும் கட்டுப்பாடுகள், தணிக்கைகளையும் தாண்டி இதுபோன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள், அத்துமீறல்கள் தொடர்பான நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறையவரத் தொடங்கி உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.