தமிழத்தின் நெல்லை மாவட்டத்தில் கவனித்துக் கொள்ள முடியாததால் 90 வயது பாட்டியை அவரது பேத்திகள் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலை அருகே, அடையாளம் தெரியாத சடலம் ஒன்று எரிக்கப்பட்டு கருகிய நிலையில் கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உடலை கைப்பற்றிய பொலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த தகவல் மூலம், கிருஷ்ணப்பேரியை சேர்ந்த மாரியம்மாள் (30), அவரது சகோதரியான மேரி (38) ஆகியோரை பொலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது அவர்களது 90 வயது பாட்டி சுப்பம்மாள் என்று தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட சகோதரிகள் அவரை பராமரித்து வந்ததாகவும், தொடர்ந்து அவரை கவனிக்க முடியாததால் ஆட்டோவில் அழைத்து சென்று எரித்து கொன்று விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டனர்.