திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதி வந்தார். ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ‘ஜெகனண்ணா வித்யா தீவனா’ எனும் அரசு கல்வி திட்டத்தின் பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர், மாணவியரின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 709 கோடி கல்விக் கட்டணத்தை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இனி 3 மாதத்திற்கு ஒரு முறை மாணவ, மாணவியர் கல்விக் கட்டணத்தை அரசு நேரடியாக அவரவர் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் என உறுதி அளித்தார்.
பின்னர், அலிபிரியில் பைபாஸ் சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 300 கோடி செலவில் கட்டப்பட உள்ள பத்மாவதி சிறுவர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.684 கோடியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீநிவாச மேம்பாலத்தின் முதற்கட்ட பணிகள் நிறை வடைந்ததால், 7 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட முதற்கட்ட மேம்பாலத்தை முதல்வர் ஜெகன் திறந்துவைத்தார். அதன் பின்னர் அலிபிரிசாலையில் டாட்டா நிறுவனமும், திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து ரூ.180 கோடியில் கட்டிய புற்றுநோய் ஆய்வு மையத்தை முதல்வர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்.