திருவாரூர் அருகே கட்சிக்கு நிதி திரட்டும் அராஜகத்தில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் நகர் பகுதியில் அமைந்துள்ள கனீஷ் பேக்கரியில், விடுதலை சிறுத்தை கட்சியினர் நிதி கேட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த ஊழியர்கள் 20 ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது.
கட்சி நிதிக்காக 20 ரூபாய் மட்டும்தான் கொடுப்பீர்களா? என்று கூறி விசிகவினர் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர் கடையில் இருந்த பொருட்களை தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி குடவாசல் பகுதியில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் விடுதலை சிறுத்தை கட்சியின் குடவாசல் நகர செயலாளர் பால் கிட்டு, ஒன்றிய துணை செயலாளர் செந்தில் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேலும், இந்த கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியது.