சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“எங்கள் திருநாட்டில், எங்கள் நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடும் என்றே நீ
என்ற கவிஞர் பாரதிதாசனின் எண்ணம், தமிழகத்தில் 07.05.2021 அன்று மீண்டும் ஈடேறியது. அந்த நாளில், நீதிக்கட்சியின் நீட்சியாய், தி.மு.கழக அரசின் தொடர்ச்சியாய், முதல்வர் பொறுப்பு ஏற்றபோது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று அவர் தொடங்கிய உறுதிமொழியின் வீர முழக்கம், தமிழர் செவிகளில் இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஓராண்டு முடிவதற்கு உள்ளாகவே முனைந்து நின்று நிறைவேற்றிய, ஓய்வு அறியா உழைப்பாளியாம், நம் முதல்வரின் செயல் திறனை நாடும் ஏடும், நல்லவர்களும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் பாராட்டிப் புகழ்மாலை சூடி இருப்பது, திராவிட இயக்கத்திற்குப் பெருமை சேர்க்கின்றது.
தமிழ்நாட்டில் அரசு பணி இடங்களில் தமிழர்களுக்குத்தான் வாய்ப்பு, அவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெறல் வேண்டும்; அரசு ஊழியர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும், கோப்புகள், அரசு செயல்பாடுகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இடம்பெற வேண்டும் என்பன போன்ற அறிவிப்புகளால் தமிழுக்கும், தமிழர்க்கும் உரிய இடம் தந்து சிறப்பு செய்து வருகிறது கலைஞரின் வழி நிற்கும் தமிழ்நாடு அரசு.
‘ஈழத்தமிழர்கள் அகதிகள் அல்ல’ என்று அறிவித்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்ற புதிய பெயரினைச் சூட்டி, 317 கோடி ரூபாய் மதிப்பிலான சமூக நலத் திட்டங்களை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்கள் நலனை மேம்படுத்த 13 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவினையும் அமைத்தது ஸ்டாலினின் அரசு.
தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை மக்களுக்காக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர் காக்கும் மருந்துகள் இவைகளோடு தி.மு.கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்து இருக்கின்றது தமிழ்நாடு அரசு.
அனைவருக்கும் அனைத்தும் என்ற திராவிட இயக்க லட்சியங்களை நிறைவேற்றும் அரசாக, தமிழ்நாடு அரசு கடந்த ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. இந்தச் சாதனைச் சரிதம் தொடரவும், அனைத்துத் துறைகளிலும் திராவிட இயக்கக் கொள்கைகள் நிறைவேற்றிடவும் மின்னல் வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்ற ஸ்டாலின் அரசுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.