ஐ.பி.எல் கிரிக்கெட் – டெல்லி அணி அபார வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று (05) நடைபெற்ற போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரில் நேற்று (05) மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது.

இதனால், முதலில் துடுப்பாட்டத்தை செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் பெற்றது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ஓட்டகளுடனும், பாவெல் 67 ஓட்டகளுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 7 ஓட்டங்கள், கேப்டன் வில்லியம்சன் 4 ஓட்டங்கள், ராகுல் திரிபாதி 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நிகோலஸ் பூரன் அரைசதம் கடந்து, 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 62 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால், டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 5ஆவது வெற்றி ஆகும்.

 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.