கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், மட்டூர் தாலுக்காவில் வண்ண நாரை ஒன்று மின்கம்பியின் மீது மோதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. வலசை வரும் பறவைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தவிர்க்க மின்கம்பங்களுக்கு இடையில் மின்சாரம் தாக்காமல் இருக்க இன்சுலேட்டட் கேபிள்களை (insulated cables) அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
மைசூரு மாவட்டம், கொக்கரே பெல்லூர் அருகே ஷிம்ஷா நதிக்கரையில் உள்ள சுஞ்சகஹள்ளி கிராமத்தில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வண்ண நாரை ஒன்று பறக்கும்போது மின்கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இச்சம்பவத்தை போன்று இன்னொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க கிராம மக்கள் வனத்துறையினருக்கு இத்தகவலை தெரிவித்து, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மைசூரின் வனவிலங்கு பிரிவில், துணை வன பாதுகாவலராக பணிபுரியும் வி. கரிகாலன் தெரிவிக்கையில், ”பறவைகள் மின்கம்பங்களில் மோதி இறக்கும் சம்பவங்களை தடுக்க உடனடியாக மின்சாரம் தாக்காத இன்சுலேட்டட் கேபிள்களை (insulated cables) அமைக்க வேண்டும் என மின்சார விநியோக கார்ப்பரேஷனுக்கு (CESC) கடிதம் எழுதி உள்ளோம். சுமார் 100 மீட்டருக்கு கேபிள் அமைக்க 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் அந்த பணிக்கான செலவை வனத்துறை ஏற்கும். பறவைகள் நடமாட்டம் உள்ள இடங்களிலும், மரங்களுக்கு அருகிலும் இந்த கேபிள் அமைக்கப்படும். பறவைகள் வலசை வருவதற்கு முன்பே பணியை மேற்கொள்வோம் ” என்று தெரிவித்துள்ளார்.