Tamilnadu Stanly Medical College Issue : சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், வருகை பதிவேடு முறைகேடு நடந்ததாக கூறி வீடியோ பதிவு செய்த தடயவியல் துறை அதிகாரி லோகநாதன் 40 பெண் மருத்துவர்களால தான் தாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மாணவி ஒருவர் பல நாள் வருகைகான கையெழுத்தை ஒரே நாளில் பதிவிட்டதாக கூறி வீடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மருத்துவக்கல்லூரியில் தடயவியல் துறை அதிகாரியாக பணியாற்றி வரும் லோகநாதன் என்பவர் மாணவியை வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த கல்லூரி அதிகாரிகள் குழு அமைத்தது.
இது குறித்து விளக்கம் அளித்த கல்லூரி நிர்வாகம் வருகை பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறியதை தொடர்ந்து மாணவியின் அனுமதி இல்லாமல் அவரை வீடியோ எடுத்த தடயவில் துறை அதிகாரி லோகநாதன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தடயவியல் அதிகாரி லோகநாதன் 40 பிஜி மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
எனது செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்க கடந்த புதன்கிழமை மாலை மருத்துவமனை அதிகாரிகள் குழு ஆலோசனைக் கூடத்திற்கு அழைத்தனர். அப்போது “நான் எனது விளக்கத்தை எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர்கள் என்னை ஹாலுக்குப் பக்கத்திலுள்ள ஒரு அறைக்குச் போக சொன்னார்கள். அங்கு சென்று நான் அதை மீண்டும் எழுதத் தொடங்கியபோது, சுமார் 40 பெண் மருத்துவர்கள் – குறிப்பாக பிஜி மாணவர்கள், திடீரென, உள்ளே நுழைந்து, என்னைத் தாக்கினர்.
இந்த தாக்குதலில் , என் செல்போனை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்க வேண்டும்” என்றும், இந்த சம்பவம் குறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், “அட்டெண்டன்ஸ் முறைகேடு பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பதற்கு பதிலாக, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் அதிகாரிகள் அதை என் மீதான வழக்காக முன்னிறுத்த முயற்சிக்கின்றனர்.
இதை வீடியோவாக பதிவு செய்து, அரசு கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக போராடி வரும் வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளேன்,” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“