வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வருகிற 8-ஆம் தேதி ‘அசானி’ புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் 8-ஆம் தேதி புயலாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக, சனிக்கிழமையன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலும் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை எட்டரை மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், மசினகுடி, மேல் கூடலூர் பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அந்தமான் கடல், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM