பெண்களை கேலி செய்ததை கண்டித்த வாலிபர் படுகொலை- உறவினர்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீடுர் புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் கேசவன் (30). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த 1ம் தேதி அதே பகுதியில் உள்ள குளத்தின் அருகே இருந்த போது மினி டேங்கில் துணி துவைத்து கொண்டிருந்த பெண்களை கேலி செய்த அதே ஊரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரை கேசவன் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது.இதை முன்விரோதமாக வைத்து வீட்டிலிருந்த கேசவனை அலெக்சாண்டர் கருங்கல்லால் முகம் , தலை என சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கேசவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சித்தணி பகுதியில் கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று குற்றவாளியை கைது செய்துவிட்டதாக உறவினர்களை பேசி சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கேசவன் மனைவி வித்யஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் ஆகியோர் கொலை வழக்காக பதிந்து அலெக்சாண்டரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.