கடலூர் துறைமுகத்தை இயக்கத்திற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

டெல்லி: டெல்லியில் இன்று (06.05.2022) நடைபெற்ற தேசிய சாகர்மாலா உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; எங்களின் அன்பிற்குரிய தலைவர், திராவிட மாடல் நிர்வாகத்தின் ஒளிவிளக்கான  திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வலுவான மற்றும் சக்திவாய்ந்த தலைமையின் கீழ் தமிழ்நாடு வேகமாக வளர்ந்துவரும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்திய அரசின் நிதியுதவி மூலம் கடலூர் மற்றும் கன்னியாகுமரி துறைமுகங்களில் மேம்பாட்டுப்  பணிகள் நடைபெற்று வருகிறது என மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடலூர் துறைமுகக் கட்டுமான மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையவுள்ளன. இத்துறைமுகத்தை இயக்கத்திற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும். இவ்விடத்தில் நான் தங்களின் கனிவான பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கு இரு புதிய திட்டங்களைச் சமர்ப்பிக்கிறேன். முதலாவதாக பாம்பன் கால்வாய் தூர்வாருதல் பாம்பன் கால்வாயில் 2 மீட்டர் ஆழம் மட்டுமே உள்ளது. இக்கால்வாயை சிறு கப்பல்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் உபயோகப்படுத்தி வருகின்றன. இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கால்வாய் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை இணைக்கும் முக்கிய கால்வாயாக இருப்பதால், தூர்வாரி மேம்படுத்துவது அவசியமாகும். இந்திய இரயில்வே புதிய இரயில் தடத்தினை அதன் மையப் பகுதிகளில் தானியங்கி தூக்கு வசதியுடன் அமைத்து வருகின்றனர். இதற்கிடையில், பாம்பன் கால்வாயை 10 மீட்டர் ஆழத்திற்குத் தூர்வாருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையினை தமிழ்நாடு கடல்சார் வாரியம் தயாரித்துள்ளது.  இக்கால்வாய் இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை ஆகியோரின் படைக் கப்பல்கள் கடப்பதற்கு மட்டுமல்லாது, சிறு மற்றும் நடுத்தரக் கப்பல்கள் மூலம் உள்நாட்டு வணிகத்திற்கு மிக முக்கியமானதாகும். எனவே பாம்பன் கால்வாயைத் தூர்வாருவது மிக இன்றியமையாததாகும். இரண்டாவதாக தீவுகளின் முழுமையான வளர்ச்சி இராமேஸ்வரம் தீவு ஒரு முக்கியமான இடமாகும். இராமேஸ்வரம் தீவின் கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும் வகையில், ஒன்றிய அரசின் தீவுகளின் முழுமையான வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இங்கு உள்ள புகழ்பெற்ற இராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பயணிகள் படகு சேவையை வழங்க உத்தேசித்திருக்கிறோம். இத்தீவைச் சுற்றிலும் பயணிகள் தோணித்துறைகள் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையுடன் புதிய கருத்துருக்கள் அனுப்பப்படும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புதுமையான இந்தத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டுமென்றும் கோருகிறேன். இவ்வாறு கூறினார். இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளர் திரு.தீரஜ்குமார்,இ.ஆ.ப., மற்றும் மாநில துறைமுகம் அலுவலர் கேப்டன் திரு.அன்பரசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.