இந்தியா முழுவதும் நிலவும் மின் நெருக்கடியைச் சமாளிக்க, மத்திய அரசு மின்சாரச் சட்டத்தின் 11வது பிரிவைச் செயல்படுத்தி உள்ளது. அதன்படி இறக்குமதி நிலக்கரியை கொண்டுள்ள மின் நிலையங்கள் முழு திறனில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என மின் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மின் உற்பத்திக்கு நிலக்கரியையே இந்தியா பெரும்பாலும் நம்பியுள்ளது. இறக்குமதியை தற்போது அதிகப்படுத்தியுள்ளனர். நிலக்கரியை மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லவும் துரித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலக்கரி ரயில்களுக்கு முக்கியத்துவம் தந்து பயணிகள் ரயில்கள் பலவற்றை ரத்து செய்துள்ளனர். இந்நிலையில் மின்சாரச் சட்டத்தின் 11வது பிரிவை அரசு செயல்படுத்தி உள்ளது. அதன்படி அசாதாரண சூழ்நிலைகளில், எந்தவொரு மின் உற்பத்தி நிறுவனத்தையும் அதன் நிலையங்களை இயக்கவும் பராமரிக்கவும் உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு கிடைக்கும்.
இது தொடர்பாக மத்திய அரசு கூறியுள்ளதாவது: மின்சாரத்திற்கான தேவை கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. அதே சமயம் பெருகி வரும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை. இறக்குமதி நிலக்கரியை கொண்டுள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அவற்றின் முழுத் திறனில் இயங்கி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (என்.சி.எல்.டி) கீழ் இருந்தால், அதைச் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் குஜராத், ஆந்திரா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் 7 ஜிகாவாட் அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படத் தொடங்கும். அதானி பவர் மற்றும் டாடா பவர் ஆகியவற்றின் செயல்படாத யூனிட்களை மீண்டும் தொடங்கவும் இது உதவும்.
Advertisement