2021 மே மாதம் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்றவாறு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் ஸ்டாலின். அப்போது, ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஓராண்டு வரை எந்த ஒரு அமைச்சரும் நீக்கப்படவில்லை. ராஜகண்ணப்பன் உள்ளிட்டச் சிலரின் இலாக்காக்கள் மட்டும் மாற்றப்பட்டது. இந்நிலையில், ஓராண்டு ஆட்சியில் எந்தெந்த அமைச்சர்கள் தங்களது துறைகளில் சாதித்தனர்? சறுக்கினார்கள்? என்பது குறித்து தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்துவரும் அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம்.
“அமைச்சர்கள் சாதித்தனர் என்று சொல்வதை விட, நன்றாக செயல்பட்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏனெனில், ஆட்சியமைத்து வெறும் ஓராண்டில் சாதனை எதையும் செய்ய வாய்ப்பில்லை. அப்படியே சாதனை செய்வதாயினும் அந்த கிரெடிட்டை முதல்வருக்குச் சொல்வார்களே தவிர, அமைச்சர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். தலைநகரான சென்னையிலிருந்தே பட்டியலைத் தொடங்குவோம்.
மா.சுப்பிரமணியன்
தி.மு.க ஆட்சியே கொரோனா அலையில் தான்அமைந்தது என்பதால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கே பொறுப்பு அதிகமானது. அத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட மா.சுப்பிரமணியன் மருத்துவர் அல்ல என்றாலும், அவரின் கள செயல்பாட்டை கணக்கிட்டே அவரிடம் முக்கியமான இப்பொறுப்பினை ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கெனவே, கொரோனா முதல் அலையில் இருந்தே செயலாற்றி வரும் மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருண்ணன் உடனிருந்ததால், துணிச்சலுடன் களத்தில் இறங்கினார் மா.சு.
தினந்தோறும் அரசு சார்பில் ஒவ்வொரு இடங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைப்பது, மருத்துவமனைகளை ஆய்வுசெய்வது என கலக்கினார். கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதும், தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று தடுப்பூசி முகாம்களைத் திறந்துவைப்பதும், ஆய்வுசெய்வதுமாக இருந்தார் மா.சு.
கோவிட் அலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிய பின்னர்தான் மா.சு-வுக்கு சற்று ஓய்வு கிடைத்தது. இருந்தபோதும், மா.சு மீதானப் புகாரும் இன்னொரு பக்கம் லேசாக வெளிப்பட்டது. பணிமாறுதலில் மா.சு தரப்பின் பெயர் தவறாக அடிபட்டது.
அதனால், ஒரு கட்டத்தில் ‘டிரான்ஸ்ஃபர் கேட்டு இங்கு வர வேண்டாம்’ என்று தனது கிண்டி லேபர் காலனி இல்லத்தில் போர்டே மாட்டினார் மா.சு. இதுதவிர, மருந்து கொள்முதல், பி.பி.இ கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரங்கள் கொள்முதல் என சிலவற்றிலும் அமைச்சர் தரப்பின் பெயர் அடிபட்டது. மற்றபடி, எந்த ஒரு பெரிய புகாரின்றிச் சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களில் மா.சுப்ரமணியன் முக்கியமானவர்.
சேகர்பாபு
மருத்துவத்துறைக்கு அடுத்தபடியாக சுறுசுறுப்பாகச் செயல்பட்ட துறை என்றால் அது, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறைதான். கோயில் நிலத்தில் கடை வைத்திருந்தவர்களின் மாத வாடகையை மார்கெட் விலைக்கு ஏற்ப உயர்த்தியது, லட்சங்களில் பாக்கி வைத்திருந்தவர்களிடம் வசூல் செய்தது, கோயில் வாடகைதாரர்கள் குறித்தத் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றியது, குடமுழுக்கு செய்யப்படாத கோயில்களில் அதனை நிறைவேற்றியது, கும்பாபிஷேகம் நடத்தியது என துறையின் செயல்பாடுகள் கவனத்தைப் பெற்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்டதைத்தான் பெருமையாகப் பேசி வருகிறார்கள். அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, ‘2,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் இந்த ஓராண்டில் மீட்கப்பட்டுள்ளது’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேட்டை தொடரும் என்று சேகர்பாபுவும் தெரிவித்திருக்கிறார். சேகர்பாபு மீது கட்சி ரீதியாகப் பல்வேறுப் புகார்கள் சொல்லப்பட்டாலும் துறையில் சிறப்பாகவே செயல்பட்டதாகவே சொல்லலாம்.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
அரசுத் துறைகளில் முக்கியமானத் துறையாக நிதித்துறை உள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் நிதித்துறைக்கு மெத்தப் படித்தவரும், தி.மு.க-வின் மூன்றாம் தலைமுறை எம்.எல்.ஏ-வுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போதே புதிய முறையைக் கையாண்டார் பி.டி.ஆர். காகித வடிவில் இதுவரைத் தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட்டை, முதல்முறையாக டிஜிட்டல் வடிவில் சமர்பித்தார். அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின் கடன் சுமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பி.டி.ஆர்.
தேவையற்றச் செலவுகளுக்காக நிதிகளை விடுவிக்காதது, கமிஷன், கலெக்ஷன் தொடர்பான சர்ச்சைகளில் சிக்காதது எனச் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார் பி.டி.ஆர். எனினும், ‘தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்கிற மனநிலையில் இருக்கிறார்’ என்பது போன்ற சில சர்ச்கைகளிலும் பி.டி.ஆர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி
தி.மு.க ஆட்சியில் சர்ச்சைகளின் நாயகன் என்றால் அது செந்தில் பாலாஜி தான். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை என இரண்டு முக்கியத் துறைகள் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டபோதே முணுமுணுப்பு எழுந்தது. எனினும், மேலிடத்துக்கு லாயலாக இருந்துகொண்டு, கேட்டதை விடக் கூடுதலாகக் கொடுத்து வந்ததால் பாலாஜியை எவராலும் எதிர்க்க முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் உள்ளாட்சித் தேர்தலை கட்சிக்கு காணிக்கையாக்கியதும், அவரின் ‘பவர்’ கட்சிக்குள் உயர்ந்தது. அதேசமயம், ‘டாஸ்மாக் பார் டெண்டர் விவகாரம்’ பாலாஜியின் பெயரை பஞ்சராக்கியது.
கோடைக்காலத்தில் அதிகளவில் தற்போது மின்வெட்டுப் பிரச்னை நிலவி வருகிறது. மின்வெட்டுக்கு ஒன்றிய அரசை பாலாஜி கைகாட்டியபோது, பா.ஜ.க தரப்பிலிருந்து கடும் எதிர்வினைகள் வந்தன. தேசிய அளவிலுள்ள நிலக்கரிப் பற்றாக்குறையால், வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டு, நிலைமையை ஓரளவு சரிகட்டிவிட்டார். அமைச்சரவைச் சார்ந்த செயல்பாடுகளில், செந்தில் பாலாஜியிடம் ஏற்றமும் சறுக்கலும் சேர்ந்தே இருக்கின்றன.
ஐ.பெரியசாமி
அமைச்சரவையில் சீனியரான ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டதை ஆரம்பத்திலிருந்தே அவர் விரும்பவில்லை. இதனால், பசுமை வழிச்சாலையில் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தில் தங்காமல், மயிலாப்பூர் ஓட்டல் ஒன்றில் சென்னை வரும்போதெல்லாம் தங்கிக்கொண்டிருக்கிறாராம் பெரியசாமி. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, முதல்வராக இருந்த எடப்பாடி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குக் கீழ் நகை வைத்து கடன் பெற்றுள்ளவர்களின் நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். தேர்தல் வாக்குறுதியில் இதையே தி.மு.க-வும் கொடுத்திருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு இதுபற்றி ஆராய்ந்தபோது, நகையே இல்லாமலும், போலி நகையை வைத்தும் கடன் பெற்றிருப்பதும், ஒருவரே பல நகைக்கடன்களைப் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
இதனால், முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில், 6 லட்சத்துக்கு உட்பட்டவர்கள் தான் தகுதியானவர்கள் எனக்கண்டறிந்து அவர்களது நகைக்கடன்களை மட்டும் தள்ளுபடி செய்தது அரசு. இது பெரும்பாலானவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதும் நிதர்சனம். மேலும், கூட்டுறவு சங்கங்களில் 99 சதவிகிதம் நிர்வாகங்களில் அ.தி.மு.க-வினர் தான் பதவியில் இருந்தனர். 2018-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 2023-ல் தான் பதவிக்காலம் முடிவடைகிறது. தி.மு.க நிர்வாகிகளை கூட்டுறவு சங்கங்களில் பணியமர்த்த இது தடையாக இருந்ததால், கூட்டுறவு சங்க நிர்வாகங்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கும் சட்டத்திருத்தத்தை சட்டப்பேரவையில் அமல்படுத்தினார் ஐ.பெரியசாமி. இது கட்சி நிர்வாகிகளிடம் வரவேற்பைப் பெற்றது.
ஆனால், இதுவரை இச்சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நகைக்கடன் தள்ளுபடியைத் தவிர கூட்டுறவுத்துறையில் வேறு எந்த நகர்வுகளும் நடந்ததாகத் தெரியவில்லை.
சக்கரபாணி
செந்தில் பாலாஜிக்கு அடுத்தபடியாக செய்தித்தாள்களில் பரபரப்புக்குள்ளானவர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. அதற்குக் காரணம் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் சிறப்புத் தொகுப்பு. பச்சரிசி, சர்க்கரை, வெல்லம், கரும்பு, ஏலக்காய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பிரச்னை தலையெடுத்துவிட்டது. 21 பொருட்களையும் ஒரே டெண்டராக கொடுக்காமல், தனித்தனியாகக் கொடுத்தனர். தங்களுக்கு வேண்டிய நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்காக, குறைந்த விலை கோட் செய்த ஒரு நிறுவனத்தைத் தகுதியிழப்புச் செய்து வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எல்லாம் முடிந்து, சிறப்புத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டபோதும் பிரச்னை வெடித்தது. பல இடங்களில் வெல்லம் உருகியது, 21 பொருட்களுக்குப் பதில் 16-17 பொருட்கள்தான் இருந்தது, சில இடங்களில் பொருட்களே இல்லை போன்ற சர்ச்சைகள் வெடித்தன.
இதுமட்டுமின்றி, ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறையிலிருந்து வழங்கப்படும் அரசி, சர்க்கரை உள்ளிட்டவை குறித்தும், ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்படும் ‘பாயின்ட் ஆஃப் சேல்’ எந்திரம் குறித்தும் சர்ச்சைகள் கிளம்பின. ரேஷன் கடைப் பணியாளர்களும் தங்கள் பங்குக்கு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். புதிய ஸ்மார்ட் கார்டுகள் விநியோகத்திலும் தெளிவில்லை. இவையனைத்தையும் வைத்துப் பார்க்கப்போனால், சக்கரபாணி தனது சர்க்கார் பணியில் சறுக்கினார் என்பதே உண்மை.
ராஜகண்ணப்பன்
தி.மு.க-வுக்கு வந்த சில காலத்திலேயே எம்.எல்.ஏ சீட் பெற்று வென்று, அமைச்சரவையிலும் இடம்பிடித்தார் ராஜகண்ணப்பன். தீபாவளிப் பண்டிகையின்போது, ‘போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு தனியார் இனிப்பகத்திலிருந்து இனிப்புகளை ஆட்டர் செய்து, கமிஷன் பார்க்கிறது அமைச்சர் தரப்பு’ என பா.ஜ.க-வினர் புகார் எழுப்பினர். அதனால், அந்த டெண்டரைக் கேன்சல் செய்துவிட்டு ஆவினில் இருந்து இனிப்புகள் வாங்கப்பட்டன.
தொடர்ந்து, பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மோட்டல்கள் குறித்த சர்ச்சைக் கிளம்பியது. இந்த குறிப்பிட்ட மோட்டலில்தான் நிற்க வேண்டும் என கோயம்பேட்டிலேயே முத்திரைக் குத்தி அனுப்புவது உள்ளிட்டவை ஜூ.வி செய்தியின் மூலம் வெளிப்பட்டது. இதையடுத்து அந்த டெண்டர்களையும் கேன்சல் செய்த போக்குவரத்துத்துறை, ‘சில குறிப்பிட்ட சைவ ஓட்டல்களில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும்’ என அறிவித்தது. அதுவும் பிரச்னையாகவே, அசைவமும் உண்டு என்று மாற்றினர்.
இதுமட்டுமின்றி, தமிழக அரசின் சொந்த லஞ்ச ஒழிப்புத்துறை மூலமே, போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவரது அலுவலகத்தில் அதிரடி சோதனை நடைபெற்றது பெரிய பரபரப்பைக் கிளப்பியது. அந்த அதிகாரி அமைச்சர் தரப்பைப் பற்றி சில தகவல்களை உளறிவிட, ராஜகண்ணப்பன் மீதான பார்வை இறுகியது. இதற்கிடையே அதிகாரி ஒருவரை சாதிப்பெயர் சொல்லித் திட்டியதாக வெளியான செய்தியை அடுத்து, ராஜகண்ணப்பனின் இலாக்கா மாற்றப்பட்டது. நடந்தவற்றை வைத்துப் பார்த்தால் ராஜகண்ணப்பன் தனது செயல்பாடுகள் சறுக்கவே செய்திருக்கிறார்.
நாசர்
மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஆவின் பால் விநியோகிக்கும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மீதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. அதற்குக் காரணம் நாசர் அல்ல, அவரது மகன் ஆசிம்ராஜா. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, ‘ஆசிம்ராஜா தான் ஆவடி மேயர்’ என ஒட்டுமொத்த திருவள்ளூரையும் ஆட்டி வைத்தனர் அமைச்சரின் ஆதரவாளர்கள். அது நாசருக்கே சிக்கலானது. எனினும், 36 லட்சமாக இருந்த ஆவின் பால் கொள்முதலை, 41 லட்சம் லிட்டராக உயர்த்தி ஓரளவு சறுக்கலில் இருந்து தப்பித்துக்கொண்டார் நாசர். இவரும் சாதனையும் செய்யவில்லை, சறுக்கவும் இல்லை.
இவர்கள் தவிர்த்து மற்ற அமைச்சர்கள் குறித்து பார்க்கும்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸை பொறுத்தவரை, முன்பு இத்துறையில் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் போலவே அமைதியாக இருப்பவர். எந்த வித பெரிய சச்சரவுகளிலும் சிக்காமல், ஓராண்டினை நிறைவு செய்திருப்பது ஓரளவு செயலாற்றினார் என்றே சொல்லலாம். மற்றபடி, சீனியர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரின் செயல்பாடுகள் இன்னும் பெரிய அளவில் வெளிச்சம் கிடைக்கவில்லை.
வேளாண்மைத்துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ததைத் தவிர, வேறு எந்த முன்னெடுப்பையும் அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மேற்கொள்ளவில்லை. பல்கலை துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் வகையிலான சட்டத்திருத்தம் செய்ததைத் தவிர, வேறு எதையும் செய்யவில்லை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆட்சி அமைந்ததில் இருந்து அவ்வப்போது சில தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டதில் இருந்து, துபாய்க்கு முதல்வருடன் சென்று சர்ச்சையில் சிக்கியது வரை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்திகளில் பரபரப்பாகவே பேசப்பட்டதுடன், ஓரளவு துறையில் மெனக்கெட்டிருக்கிறார். தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையிலும் இயன்றளவு செய்திருக்கிறார். இதைவைத்துப் பார்த்தால், தங்கம் தென்னரசு ஓரளவு செயல்பட்டவர் என்றே சொல்லலாம்.
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (முன்பு குடிசைப்பகுதி மாற்று வாரியம்) துறைகளை கவனித்துவந்த தா.மோ.அன்பரசன், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இருந்து போக்குவரத்துறைக்கு மாறிய எஸ்.எஸ்.சிவசங்கர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இந்த ஓராண்டில் எந்தவித சொல்லத்தகுந்த செயல்பாடுகளை முன்னெடுக்காததால், சற்று சறுக்கவே செய்துள்ளனர்!” என்பதோடு முடித்துக்கொண்டார்.