ஜிஹாதி, வகுப்புவாத வன்முறை, இடதுசாரி தீவிரவாதத்தை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாத எதிர்ப்பு உள்கட்டமைப்பு: போலீஸ் ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகம் பரிந்துரை

புதுடெல்லி: ஜிஹாதி, வகுப்புவாத வன்முறை, வடகிழக்கு மாநிலங்களில் மோதல், இடதுசாரி தீவிரவாதத்தை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாத எதிர்ப்பு உள்கட்டமைப்பை ஏற்படுத்த போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2008ம் ஆண்டு நடந்த மும்பை வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அதனை எதிர்கொள்ளும் வகையில், இன்னும் உறுதியான  மற்றும் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்பட்டன. மேலும் தீவிரவாதத்தை கையாள்வதற்கான சக்திகளை வலுப்படுத்தவும், அதற்கான கடுமையான சட்ட விதிகளை  உருவாக்கும் வகையிலும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் சில பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, கடந்த 2009ம் ஆண்டு ‘தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம்’ அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் முன்மொழியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2012ம் ஆண்டு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இருந்தும் அதன் அமைப்பு,  செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக பல மாநிலங்களும் அதிருப்தியை  வெளிப்படுத்தியதால் அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டின் புள்ளி விபரங்களின்படி, நாட்டில் உள்ள 28 மாநிலங்களில்  19 மாநிலங்களில் அந்தந்த மாநில காவல்துறை சார்பில் தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் அந்த கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை. இந்த தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பில் பணியாற்றும் அதிகாரிகள் தொழில் சார்ந்த நுணுக்கங்களை பகிர்ந்து கொள்வதிலும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் தொடர்பாக சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, ஜிஹாதி தீவிரவாதம், வகுப்புவாத வன்முறை, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் மோதல்கள், இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை ஒடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ‘வலுவான தீவிரவாத எதிர்ப்பு’  உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தேசவிரோத செயல்பாடுகள் தொடர்பான உளவு தகவல்களை சேகரிக்கும் ஐபி அமைப்பானது, தீவிரவாத எதிர்ப்பு  நடவடிக்கைகளிலும், வெடிகுண்டு சம்பவங்களை கையாள்வதிலும் மாநிலங்களின் சிறப்புப் படைகளுக்கு உதவும்.புலனாய்வுப்  பிரிவு, தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை ஆகிய அமைப்புகள் மாநில  காவல்துறைப் படைகளுக்கு பயிற்சி அளிக்கும். மேலும், மாநில  போலீஸ் படைகளுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்கும். வழக்கு விசாரணைக்கும் உதவும். உளவுத்துறை விடுக்கும் எச்சரிக்கையை செயலாக்குதல், வரையறுக்கப்பட்ட வியூகங்களை வகுத்தல், கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்காக தீவிரவாத எதிர்ப்பு உள்கட்டமைப்பை செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, 12 ஆண்டுகள் வரையிலான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலத்திற்கான திட்டத்தை மாநிலங்கள் தேசிய தீவிரவாத எதிர்ப்பு உத்திகளை உருவாக்கும் உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கி சப்ளை கும்பல் 24 பேர் கைதுகுஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர், சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கிய சம்பவத்தில் 24 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து 54 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் தேவேந்திர போரியா மற்றும் சாம்ப்ராஜ் கச்சார் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளில் சவுராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட 100 நாட்டுத் துப்பாக்கிகளை விற்றுள்ளனர். இதுகுறித்து துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஷ் உபாத்யாய் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து 54 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளோம். அவர்கள் துப்பாக்கிகளை மத்திய பிரதேசத்தில் இருந்து வாங்கியதாகவும், வதோதராவைச் சேர்ந்த நபருக்கு விற்க வைத்திருந்ததாக கூறினர். இதுபோன்று கடந்த 2 ஆண்டுகளில் 100 கைத்துப்பாக்கிகளை விற்றதை ஒப்புக்கொண்டனர். ஒவ்வொரு கைத்துப்பாக்கியையும் சுமார் ரூ. 15,000 முதல் ரூ 25,000 வரை விலைக்கு வாங்கிவந்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.40,000 முதல் ₹ 1 லட்சம் வரை விற்றுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.