உதவிகேட்ட போது வீடியோ எடுத்தனர்: ஐதராபாத் ஆணவக்கொலையில் பலியானவரின் மனைவி வேதனை

ஐதராபாத் :

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (வயது 26). இந்து மதத்தை சேர்ந்த இவரும் அதேமாவட்டம் ஹனபூர் கிராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர்.

பல ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் இந்த காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதனால், இருவரின் காதலுக்கும் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால், பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி 31-ம் தேதி நாகராஜூ – சுல்தானா  திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையில், தங்கள் எதிர்ப்பையும் மீறி நாகராஜூவை திருமணம் செய்துகொண்டதால்  சுல்தானாவின் சகோதரன் சையது மொபின் முகமது உள்பட குடும்பத்தினர் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், தனது சகோதரி சுல்தானாவும் அவரது கணவர் நாகராஜூவும் சரோன் நகரில் இருந்தது முகமதுவுக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரவு முகமது தனது உறவினரான முகமது மசுத் அகமதுவுடன் பைக்கில் சரோன் நகருக்கு சென்றுள்ளார்.

சரோன் நகரின் முக்கியமான பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் நடுவே சுல்தானாவும் அவரது கணவர் நாகராஜூவும் பைக்கில் சென்றபோது அந்த பைக்கை முகமது இடைமறித்துள்ளார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் நாகராஜூவின் தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த நாகராஜூ நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட நாகராஜூ-வின் மனைவி சுல்தானா வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ” நானும் என் கணவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். சாலையை கடப்பதற்காக எனது கணவர் வண்டியின் வேகத்தை குறைத்தார். அப்போது திடீரென்று இரண்டு பைக்குகள் வந்தன. அவற்றில் ஒன்றில் என் சகோதரர் இருப்பதை நான் முதலில் பார்க்கவில்லை.

அவர்கள் என் கணவரைத் வண்டியில் இருந்து கீழே தள்ளினார்கள. கீழே விழுந்த என் கணவரை எனது சகோதரனும் அவரது நண்பரும் கம்பியால் தாக்க ஆரம்பித்தனர். நான் அவரை காப்பாற்ற முயன்றபோது, என் சகோதரனின் நண்பர்கள் என்னைத் தள்ளினார்கள். நான் உதவிக்காக கெஞ்சினேன். ஆனால் அதை பார்த்து கொண்டு இருந்த மக்கள் வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர்.

சமுதாயத்தை நம்பி மக்களிடம் உதவி கேட்டு நான் அப்போது நேரத்தை வீணடித்தேன். அந்த நேரத்தை என் கணவருக்கு இன்னும் ஏதாவது உதவி செய்ய பயன்படுத்தியிருக்கலாம். என் கணவரை என் அண்ணன் தான் கொன்றான் என என் கணவருக்கு தெரியாது .” என சுல்தானா தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.