“காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்" – வடக்கு பிராந்திய ராணுவ தளபதி

காஷ்மீர் உதம்பூரில் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் இந்தியா செய்துகொண்ட பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் விதிமீறல்கள் குறைந்துள்ளன.

தீவிரவாதிகள்

கடந்த 13 மாதங்களில் மூன்று விதி மீறல்கள் மட்டுமே நடந்துள்ளன. ஆனால், எல்லைக்கு அந்தப்பக்கம் பயங்கரவாத கட்டமைப்புகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. 6 பெரிய அளவிலான பயங்கரவாத முகாம்களும், 29 சிறிய பயங்கரவாத முகாம்களும் செயல்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளன. ராணுவ நிலையங்களுக்கு அருகில் தற்காலிக பயிற்சி முகாம்களும் இயங்கி வருவதாகத் தெரிகிறது.

மேலும், எல்லையில் பயங்கரவாதம் இன்னும் நீடிப்பதற்குப் பாகிஸ்தான் ராணுவமே காரணம். அதன் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்காது. எல்லைக்கு அந்தப்பக்கம் காஷ்மீருக்குள் ஊடுருவத் தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள் உள்ளனர். அதேசமயத்தில் ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

ராணுவ வீரர்கள்

தீவிரவாதிகள் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் வழியாக மட்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் செய்வது கிடையாது. ஜம்மு, பஞ்சாப், நேபாளம் ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச எல்லை வழியாகவும் ஊடுருவுகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு அழிப்பதுதான் எங்கள் நோக்கம்.

தற்போது 40 முதல் 50 உள்ளூர் பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ளனர். வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு என இன்னும் கண்டறியப் படவில்லை. ஆனால், வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

அமர்நாத் யாத்திரை

இதுவரை 21 வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் இந்த ஆண்டு மட்டும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், உள்ளூர் பயங்கரவாதிகள் போதிய பயிற்சி இன்றி வெறும் துப்பாக்கியுடன் வலம் வருகின்றனர். இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தின் சேர்ப்பது கவலை அளிக்கிறது. அதனால், அவர்களை மூளைச்சலவை செய்யப்படுவதிலிருந்து விடுவிக்க நாங்களும் முயன்று வருகிறோம்.

காஷ்மீர் சாலைகளில் எப்போது ராணுவ வீரர்கள் தேவையில்லை என்கிற நாள் வருமோ, அப்போது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தானாகவே நீக்கப்படும். கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமர்நாத் யாத்திரைக்கு வருபவர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்காத அளவுக்குக் கூடுதல் படைகளை அமைத்துக் கண்காணித்து வருகிறோம்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.